2016-09-05 16:10:00

சொத்து சமநிலையற்ற நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 2வது இடம்


செப்.,05,2016. சொத்து சமநிலை அற்ற நாடுகள் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளதாக அண்மையில் வெளியான ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கோடீஸ்வரர்களும், அல்லது, 10 லட்சம் டாலருக்கு அதிகமாக சொத்து வைத்திருப்பவர்களுமே, பாதிக்கும் மேலான சொத்துக்களைக் கொண்டிருப்பதால், சொத்து சமமற்ற தன்மை இந்தியாவில் நிலவுவதாக, நியூ வேர்ல்டு வெல்த் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்த பட்டியலில் ரஷ்யா முதலிடத்திலும், அதற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இந்தியாவும் உள்ளன.

இந்தியாவில் உள்ள ஏறத்தாழ 54 விழுக்காடு சொத்துக்கள் பெரும்பணக்காரர்கள் கையிலேயே உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் தனி நபர்களின் மொத்த சொத்து மதிப்பு 56,00,000 கோடி டாலர் எனவும்,. இருப்பினும் சராசரி இந்தியர்கள் இன்னும் ஏழையாகவே இருக்கின்றனர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் சமத்துவமின்மை நிலையைப் பற்றி அறிந்து கொள்ளும் நோக்கில், கோடீஸ்வரர்கள் கட்டுப்பாட்டில் உள்ள சொத்துக்கள் மற்றும் அதிக சொத்துக்களைக் கொண்ட தனிநபர்கள் ஆகியவற்றை வைத்து இந்த ஆய்வை நியூ வேர்ல்டு வெல்த் நிறுவனம் நடத்தியுள்ளது.

ஆதாரம் : தி இந்து /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.