2016-09-03 16:41:00

துன்புறுவோர்க்கு முதுகைக் காட்டுவது நவீனகால பாவம்


செப்.03,2016. இறைவனின் இரக்கம் ஏதோ ஓர் அழகான கருத்து அல்ல, மாறாக, அது தெளிவான செயலில் விளங்குவதாகும், மேலும், அது, நம் அன்றாட வாழ்வின் செயல்களில் தெளிவாக வெளிப்படாதவரை, மனித இரக்கமும் உண்மையானதல்ல, என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருஅவையில் இவ்வெள்ளி முதல் சிறப்பிக்கப்பட்டு வரும் இரக்கத்தின் மற்றும் தன்னார்வப் பணியாளர்கள் யூபிலியின் ஒரு நிகழ்வாக, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் இச்சனிக்கிழமை காலையில் கூடியிருந்த ஏறத்தாழ நாற்பதாயிரம் மக்களுக்கு உரையாற்றிய திருத்தந்தை, அன்பு பற்றி பவுலடிகளார் கொரிந்தியர்க்கு (1கொரி.13:1-13) கூறியிருப்பதை மையப்படுத்திப் பேசினார்.

கைவிடப்பட்ட சிறார், நோயாளர், வயதானவர்கள், உணவு அல்லது வேலையின்றி இருப்போர், வீடற்றவர், கைதிகள், அகதிகள், புலம்பெயர்ந்தோர், இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்டோர் என, உதவி தேவைப்படும் அனைவருக்கும், இப்பணியாளர்கள் ஆற்றும் சேவையின் வழியாக, திருஅவையின் நம்பகத்தன்மை, நம்பத்தக்க வகையில் வெளிப்படுத்தப்படுகின்றது என்று கூறினார் திருத்தந்தை.

துன்புறும் மனிதரைப் பார்த்து முகத்தைத் திருப்பிக்கொண்ட, குரு மற்றும் லேவியர் (லூக்.10,25-35) போல் செயல்பட வேண்டாமெனவும், இப்படிச் செயல்படுவது மாபெரும் பாவம், இது நவீனகால பாவம், இன்றையப் பாவம் எனவும், இதை நாம் அனுமதிக்க முடியாது எனவும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இப்பணியாளர்கள் தாங்கள் ஆற்றும் பணிகளில், எப்போதும் நிறைவான மகிழ்வுடன் இருக்குமாறும், பிறரைவிட தாங்கள் உயர்ந்தவர்கள் என்று ஒருபோதும் எண்ணாமல் இருக்குமாறும் கேட்டுக்கொண்டார், திருத்தந்தை.

இவ்வுலகத்திற்கு, குறிப்பாக, புறக்கணிப்புச் சோதனைகளை எதிர்நோக்கும் உலகத்திற்கு, ஒருமைப்பாட்டின் காணக்கூடிய அடையாளங்கள் தேவைப்படுகின்றன என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அன்னை தெரேசா அவர்களை, இஞ்ஞாயிறன்று, ஒரு புனிதராக அறிவிப்பதைப் பார்த்து மகிழவிருக்கின்றோம், இப்புனிதரின் எடுத்துக்காட்டைப் பின்பற்றி, உலகின் துன்பங்களை அகற்றுவதில், கடவுளின் கரங்களில், நாம் தாழ்மையான கருவிகளாகச் செயல்பட, இறையருளை இறைஞ்சுவோம் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ். இவ்வாறு திருத்தந்தை கூறியபோது பலத்தக் கரவொலி எழும்பியது.

வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த மக்கள் மத்தியில் திறந்த காரில் வந்தபோது, ஏராளமான சிறாரை முத்தமிட்டதோடு, ஆறு சிறாரை தனது வாகனத்தில் அமரச் செய்தார் திருத்தந்தை. மேலும், இவ்வளாகத்தில், நீலமும் வெண்மையும் கலந்த மாலை ஒன்றை, அன்னை தெரேசா சபை சகோதரிகள், திருத்தந்தைக்கு அணிவித்தனர்.

அன்னை தெரேசா அவர்கள் ஆரம்பித்த பிறரன்பு மறைப்பணியாளர்கள் சபை தலைவர் அருள்சகோதரி பிரேமா அவர்கள், இந்நிகழ்வில் முதலில் திருத்தந்தையை வரவேற்றுப் பேசினார்.

இவ்வெள்ளி முதல் சிறப்பிக்கப்பட்டு வரும் இரக்கத்தின் மற்றும் தன்னார்வப் பணியாளர்கள் யூபிலி விழா, இஞ்ஞாயிறன்று, அன்னை தெரேசா அவர்களின் புனிதர்பட்ட நிகழ்வோடு நிறைவடையும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.