2016-09-03 14:49:00

இது இரக்கத்தின் காலம் - சேரிகளின் காவல்தூதர்


“என்னிடம் வருபவர் தம் தந்தை, தாய், மனைவி, பிள்ளைகள், சகோதரர் சகோதரிகள் ஆகியோரையும், ஏன், தம் உயிரையுமே என்னைவிட மேலாகக் கருதினால், அவர் என் சீடராயிருக்க முடியாது. தம் சிலுவையைச் சுமக்காமல் என் பின் வருபவர் எனக்குச் சீடராய் இருக்கமுடியாது”.  லூக்கா நற்செய்தி 14 : 26-27

இயேசு விடுத்த இச்சவாலை தன் 18வது வயதில் ஏற்று, தன் குடும்பத்தினரையும், தாயகத்தையும் விடுத்து, துறவற வாழ்வைத் தொடர்ந்த ஓர் இளம்பெண்ணை, செப்டம்பர் 04, இஞ்ஞாயிறன்று பெருமைப்படுத்துகிறோம். தான் விரும்பித் தேர்ந்த துறவற சபையை விட்டு வெளியேறி, இயேசுவின் சவாலை இன்னும் முழுமையாக நிறைவேற்ற, 1950ம் ஆண்டு, தன் 40வது வயதில், மற்றொரு துறவு சபையை நிறுவி, துன்புறும் மக்களுக்கு தன் முழுமையான அர்ப்பணிப்பை 47 ஆண்டுகளாக வழங்கிய அன்னை தெரேசா, இஞ்ஞாயிறன்று ஒரு புனிதராக உயர்த்தப்படுகிறார். இரக்கத்தின் இறைதூதர், சேரிகளின் காவல்தூதர், சாக்கடையின் புனிதர் என்று, பல வழிகளில் புகழப்படும் அருளாளர் அன்னை தெரேசா, இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் ஒரு சிகர நிகழ்வாக, செப்டம்பர் 4, ஞாயிறன்று, வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிகழ்த்தும் சிறப்புத் திருப்பலியில், புனிதராக அறிவிக்கப்படுகிறார். 1950ம் ஆண்டு, பிறரன்பு மறைப்பணி சகோதரிகள் சபையை உருவாக்கி, இந்தியாவின் வறுமைப்பிடியில் சிக்கித்தவிக்கும் பல்லாயிரம் மனிதர்களுக்கு, தன்னால் இயன்ற அளவு விடுதலை வழங்கிய புனித அன்னை தெரேசாவிற்காக இறைவனுக்கு நன்றி சொல்வோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.