2016-09-02 16:24:00

இரக்கத்தின் ஆண்டில் மிகவும் பொருத்தமான புனிதர் அன்னை தெரேசா


செப்.02,2016. “பிறரன்பு என்பது, ஒவ்வொரு நாளும், நாம் சந்திக்கும், சமூகத்தின் விளிம்புக்குத் தள்ளப்பட்ட நிலையில் வாழும் மனிதர்களுக்கு மிக நெருக்கமாகச் செல்வதாகும்” என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில் இவ்வெள்ளியன்று வெளியாயின.

மேலும், வருகிற ஞாயிறன்று, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் நடைபெறவுள்ள அன்னை தெரேசா அவர்களின் புனிதர்பட்ட நிகழ்வை முன்னிட்டு, இவ்வெள்ளியன்று, பத்திரிகையாளர் கூட்டத்தில் பேசினார், இப்புனிதர்பட்டத்திற்கான வேண்டுகையாளர் அருள்பணி Brian Kolodiejchuk.

அன்னை தெரேசா அவர்கள், இரக்கத்தின் யூபிலி ஆண்டுக்கு மிகவும் பொருத்தமான புனிதர் எனவும், அன்னையவர்கள் சொல்லியது போன்று, நம் அகவாழ்வு வறுமையை, கல்கத்தாவின் இதயம் என்று சொல்லலாம் எனவும் கூறினார் அருள்பணி Kolodiejchuk.

பிறருக்கு இரக்கத்தையும், மன்னிப்பையும் காட்டுவதற்கு, அன்னையவர்கள் எப்போதும் தயாராக இருந்தார் என்றும், மன்னிப்பதற்கு, மிகுந்த அன்பும், மறப்பதற்கு மிகுந்த தாழ்மையும் தேவை என அன்னை தெரேசா கூறியிருக்கிறார் என்றும் தெரிவித்தார் அருள்பணி Kolodiejchuk.

அன்னை தெரேசா அவர்கள் அனுபவித்த இருளான நேரங்கள், ஆண்டவரின் இரக்கத்தின் மாபெரும் வல்லமையில், தொடர்ந்து மிகுந்த நம்பிக்கை கொண்டு, அதனைச் சார்ந்திருக்கச் செய்தன என்றும் கூறினார் அருள்பணி Kolodiejchuk.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.