2016-09-01 16:32:00

புவனேஸ்வரில், அன்னை தெரேசா பெயரில் சாலை


செப்.01,2016. அன்னை தெரேசா அவர்கள், வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் புனிதராக அறிவிக்கப்படும் செப்டம்பர் 4ம் தேதியன்று, இந்தியாவின் ஒடிசா மாநிலத் தலைநகர் கட்டக்-புவனேஸ்வரில்,  சாலை ஒன்றுக்கு, அன்னை தெரேசா சாலை எனப் பெயரிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டக்-புவனேஸ்வர் பேராயர் ஜான் பார்வா அவர்களின் வேண்டுகோளின்பேரில், புவனேஸ்வர் மாநகராட்சி, இத்தீர்மானத்தை அறிவித்திருப்பதாக ஆசியச் செய்தி நிறுவனம் கூறியது.

புவனேஸ்வர் மாநகராட்சியின் இத்தீர்மானம் குறித்துப் பேசிய பேராயர் பார்வா அவர்கள், எட்டு ஆண்டுகளுக்கு முன்னர், இந்துத் தீவிரவாதிகளால் கிறிஸ்தவர்க்கெதிரான படுகொலைகள் நடத்தப்பட்ட ஒடிசா மாநிலத்தில் இவ்வாறு பெயரிடப்படுவது மிகுந்த மகிழ்ச்சி தருவதாகத் தெரிவித்தார்.

சத்யாநகர் கட்டக்கிலிருந்து பூரி செல்லும் சாலைக்கு, அன்னை தெரேசா சாலை எனப் பெயரிடப்படவுள்ளது. செப்டம்பர் 4ம் தேதியன்று விழாத் திருப்பலிக்குப் பின்னர் இடம்பெறும் பொது நிகழ்வில், ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் அவர்கள், கலந்துகொண்டு, இந்தச் சாலைக்குரிய, புதிய பெயர்ப் பலகையைத் திறந்து வைப்பார் என்றும், பேராயர் பார்வா அவர்கள் கூறினார்.

ஒடிசா மாநிலத்தில் அன்னை தெரேசா சபையினர் 11 இல்லங்களை நடத்துகின்றனர்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.