2016-09-01 16:10:00

திருத்தந்தை : நம் பொதுவான இல்லத்திற்கு இரக்கம் காட்டுவோம்


செப்.01,2016. கடவுள் நமக்கு வளம் நிறைந்த தோட்டத்தை வழங்கியுள்ளார், ஆனால் நாம் அதை, கழிவுப்பொருள்கள், தரிசு நிலங்கள் மற்றும், குப்பைக்கூளங்களால், பயனற்ற மாசுகேடடைந்த இடமாக மாற்றியுள்ளோம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் செய்தி ஒன்று கூறுகிறது.

கத்தோலிக்கத் திருஅவையில், இவ்வியாழனன்று கடைப்பிடிக்கப்பட்ட படைப்பைப் பாதுகாக்கும் உலக செப நாளுக்கு, நம் பொதுவான இல்லத்திற்கு இரக்கம் காட்டுவோம் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டுள்ள திருத்தந்தை இவ்வாறு கூறியுள்ளார்.

இயற்கை உலகுக்கு, எதிராகக் குற்றம் இழைப்பது, நமக்கும் கடவுளுக்கும் எதிரான பாவம் என்றும், இப்பூமியின், நிலம், காற்று, தண்ணீர், வாழ்வு ஆகிய அனைத்தையும் மாசுபடுத்தி விட்டோம் என்றும், நம் பொதுவான இல்லத்தைப் பாதுகாக்க நம்மை அர்ப்பணிப்போம் என்றும் விண்ணப்பித்துள்ளார் திருத்தந்தை.

பூமி கண்ணீர் சிந்துகின்றது, ஏனெனில் நாம் பாவம் செய்துள்ளோம், மனச்சான்றை பரிசோதனை செய்வது மற்றும், மனம் வருந்துவது, மாற்றத்திற்கு முயற்சி, இரக்கத்தின் புதிய பணி, படைப்பைப் பாதுகாக்கச் செபிப்போம் ஆகிய ஆறு தலைப்புகளில், திருத்தந்தையின் இச்செய்தி அமைந்துள்ளது.

திருஅவைகளும், கிறிஸ்தவ சமூகங்களும், பிற மதத்தவரோடு இணைந்து, நம் பூமிக்கோளத்தின் வருங்காலத்தைப் பாதுகாப்பதில் மிகுந்த அக்கறை கொண்டிருப்பது மிகவும் ஊக்கமூட்டுவதாய் உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.

கான்ஸ்டான்டிநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு சபையின் முந்தைய முதுபெரும் தந்தை திமித்ரியோஸ் அவர்களைப் போன்று, தற்போதைய முதுபெரும் தந்தை பர்த்தலோமேயோ அவர்களும், படைப்பை மாசுபடுத்தும் பாவத்திற்கு எதிராக நீண்ட காலமாக குரல் எழுப்பி வருகிறார் என்பதை, சிறப்பாகச் சுட்டிக்காட்ட விரும்புவதாகவும் அச்செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சுற்றுச்சூழல் பிரச்சனைகளின் ஆணிவேராக உள்ள நன்னெறி மற்றும், ஆன்மீக நெருக்கடிகள் பற்றியும் முதுபெரும் தந்தையர் உலகினரின் கவனத்திற்குக் கொண்டு வருகின்றனர், படைப்பு முழுவதையும் காப்பாற்ற வேண்டும் என்ற கரிசனை வளர்ந்து வருவதால், 2007ம் ஆண்டில், Sibiuல் நடந்த, மூன்றாவது ஐரோப்பிய கிறிஸ்தவ ஒன்றிப்பு பேரவை, செப்டம்பர் முதல் தேதிக்கும், அக்டோபர் 4ம் தேதிக்கும் இடைப்பட்ட ஐந்து வாரங்களை, படைப்புக்கான காலமாகக் கொண்டாடுவதற்கு அழைப்பு விடுத்தது என்பதையும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.

இம்முயற்சி, உலக கிறிஸ்தவ சபைகள் மன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்றும் கூறியுள்ள திருத்தந்தை, சுற்றுச்சூழல் நீதி, ஏழைகள்மீது அக்கறை, பொறுப்புள்ள சமூக அர்ப்பணம் போன்றவற்றை ஊக்குவிக்கும் முயற்சிகள் உலகெங்கும் இடம்பெறுவது நம்பிக்கை தருவதாய் உள்ளது என்றும் கூறியுள்ளார்.

Laudato Si’ இறைவா உமக்கே புகழ் என்ற தனது திருமடலையும், இரக்கத்தின் யூபிலி ஆண்டையும் மையப்படுத்தி இச்செய்தியை வழங்கியுள்ள திருத்தந்தை, 2015ம் ஆண்டு கடும் வெப்பமான ஆண்டாக இருந்தது, 2016ம் ஆண்டும் அதேபோல் உள்ளது, பலவகை உயிரினங்களும், சுற்றுச்சூழல் அமைப்புகளும் அழிந்து வருவது குறித்து நாம் பாராமுகமாய் இருக்கக் கூடாது என்றும் கேட்டுள்ளார்.

படைப்பை உருக்குலைப்பது மற்றும் அதை அழிப்பதில் தங்களின் பங்கு குறித்து கிறிஸ்தவர்கள் மனச்சான்றைப் பரிசோதனை செய்யவும், படைப்பிற்கெதிரான நம் பாவத்தை அறிக்கையிட்டு, மனம் மாறவும், படைப்புப் பாதுகாக்கப்பட செபிக்கவும் அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், படைப்பைப் பாதுகாக்கும் உலக செப நாளுக்கு திருத்தந்தை எழுதியுள்ள இச்செய்தியை, திருப்பீட நீதி மற்றும் அமைதி அவையின் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன், இவ்வவையின் செயலர் ஆயர் Brian Farrell, The Guardian of Mercy என்ற நூலின் ஆசிரியர் Terence Ward ஆகிய மூவரும், பத்திரிகையாளர் கூட்டத்தில் இவ்வியாழனன்று வெளியிட்டனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.