2016-09-01 16:24:00

அசிசியில் அமைதிக்காகச் செபிக்கும் உலக நாளில் திருத்தந்தை


செப்.01,2016. “சமநிலையிலும், மதிப்புமிக்க வழியிலும் இப்பூமியைப் பயிரிடவும், அதைக் காக்கவும், கடவுள், நமக்கு அதை அளித்துள்ளார்” என்ற வார்த்தைகள், திருத்தந்தையின் டுவிட்டரில், இவ்வியாழனன்று வெளியாயின.

மேலும், இத்தாலியின் அசிசி நகரில் நடைபெறும், அமைதிக்காகச் செபிக்கும் உலக நாளில் இம்மாதம் 20ம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கலந்துகொள்வது குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

“அமைதிக்கான தாகம் : உரையாடலில் மதங்களும் கலாச்சாரமும்” என்ற தலைப்பில் அசிசியில் நடைபெறும் செப நிகழ்வில் கலந்துகொள்வதற்கென, செப்டம்பர் 20ம் தேதி காலை 10.30 மணிக்கு வத்திக்கானிலிருந்து புறப்படுவார் திருத்தந்தை.

அசிசியின் Santa Maria degli Angeliயின் விளையாட்டரங்கத்தை, 11.05 மணிக்குச் சென்றடையும் திருத்தந்தை, கான்ஸ்டான்டிநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு சபையின் முதுபெரும் தந்தை பர்த்தலோமேயோ, ஓர் இஸ்லாம் மதப் பிரதிநிதி, கான்டர்பரி ஆங்லிக்கன் பேராயர் Justin Welby, அந்தியோக் சீரோ ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தை 2ம் எப்ரேம், ஒரு யூதமதப் பிரதிநிதி என, இதில் கலந்துகொள்ளும் சில முக்கியமானவர்களைத் தனித்தனியே சந்திப்பார்.

மாலை 4 மணிக்கு, கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வழிபாட்டில் கலந்துகொள்வார் திருத்தந்தை. இந்த நிகழ்வின் இறுதியில் செய்தியும் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு 7.35 மணியளவில் வத்திக்கான் திரும்புவார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.