2016-08-31 15:43:00

மறைக்கல்வியுரை : மனிதரிடையே உறவுகளை மீட்டுத் தரும் விசுவாசம்


ஆக.,31,2016. கடந்த வாரம் புதன் அதிகாலை இத்தாலியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, கடந்த மறைக்கல்வி உரையின்போது மக்களுடன் இணைந்து செபித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவ்வாரத்திற்கென தயாரித்து வைத்திருந்த மறைக்கல்வி உரையை இவ்வாரம் வழங்குவதாக அறிவித்திருந்தார். அதன்படி, தன் யூபிலி ஆண்டு மறைக்கல்வித் தொடரில், இப்புதனன்று, இயேசுவின் புதுமைகளுள் ஒன்று குறித்த தன் கருத்துக்களை மக்களுடன் பகிர்ந்து கொண்டார். பன்னிரு ஆண்டுகளாக இரத்தப்போக்கு நோயினால் பாதிக்கப்பட்ட பெண் குணமடைந்த புதுமை குறித்து எடுத்துரைத்தார் திருத்தந்தை. தொழுகைக்கூடத் தலைவரின் விண்ணப்பத்தை ஏற்று, அவர் வீட்டிற்குச் சென்று கொண்டிருக்கிறார் இயேசு. அப்பொழுது, பன்னிரு ஆண்டுகளாக இரத்தப்போக்கு நோயினால் வருந்திய ஒரு பெண் இயேசுவுக்குப் பின்னால் வந்து, அவருடைய மேலுடையின் ஓரத்தைத் தொடுகிறார். இந்த பெயரிடப்படாத பெண், அக்காலச் சட்டத்தின்படி, தான் தீட்டுப்பட்டவள் என்பதை அறிந்திருந்தபோதிலும்(லேவி.15:29-30), தன் நோயிலிருந்தும், தான் சட்டத்தினால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையிலிருந்தும் விடுதலையளிக்கும் கடவுளின் இரக்கத்திலும் அவரின் மீட்பு சக்தியிலும் நம்பிக்கைக் கொண்டவராக இருந்தார். இத்தகைய ஆழமான விசுவாசத்தில் நிரப்பப்பட்டவராக, முன்சென்று இயேசுவின் மேலுடையைத் தொடுகிறார். யூத மத பாரம்பரியத்தின்படி பார்த்தோமானால், நீள மேலங்கியை அணிவது என்பது, இறைஆசீரின் ஆதாரமாகிய தெய்வீகச் சட்டங்களை அணிந்திருப்பதன் அடையாளமாகும். இயேசுவின் மேலாடையைத் தொட்ட இப்பெண்ணின் இச்செயலானது, ஒருவகை அமைதியான செபம், மற்றும், நம்பிக்கையின் அடையாளம். இயேசு, அப்பெண்ணின் மாண்பை அங்கீகரிக்கும் விதமாக, கனிவுடன் திரும்பிப் பார்த்து, பதிலளிக்கிறார். அன்புடன் அப்பெண்ணை நடத்தி, அவரின் துன்பங்களிலிருந்து விடுதலையளிக்கிறார் இயேசு. இயேசுவிலான விசுவாசம் மீட்பைக் கொணர்கிறது. அது குணத்தை வழங்குவதுடன், மனிதர்களிடையே சீரான உறவுகளையும் மீட்டுத் தருகிறது. மீறமுடியாத நம் மாண்பையும் உறுதிச் செய்கிறது. தன் வார்த்தைகளில் நம்பிக்கை கொள்ளுமாறு நம்மை நோக்கி கேட்கும் இயேசு, நாம் அவரின் இரக்கத்தை அனுபவித்தபின், அதே இரக்கத்தின் புளிக்காரமாக இவ்வுலகில் செயல்பட வேண்டும் எனவும் விண்ணப்பிக்கிறார்.

இவ்வாறு தன் புதன் மறைக்கல்வி உரையை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிக் கொண்டிருந்தபோதே, வானம் இருண்டு, இடி இடிக்க ஆரம்பித்தது. எப்போது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மறைக்கல்வி உரையை முடித்து தூய பேதுரு வளாகத்தை விட்டுக் கிளம்பினாரோ, அப்போதே பெருமழையொன்று ஓர் அரை மணி நேரத்திற்கு விடாமல் பெய்து, ஆகஸ்ட் மாதத்தின் வெயிலின் கொடுமையைத் தணித்தது. இந்த மறைக்கல்வி உரையின் இறுதியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.