2016-08-31 16:23:00

மனிதரின் வேலைகளே மனிதரைக் கொலை செய்கின்றன


ஆக.31,2016. நிலநடுக்கம் மனிதரைக் கொலைசெய்யவில்லை, ஆனால், மனிதரின் வேலைகளே மனிதரைக் கொலை செய்கின்றன என்று, இத்தாலியின் ரியேத்தி ஆயர் தொமேனிக்கோ பொம்ப்பிலி அவர்கள் கூறினார்.

கடந்த புதன் அதிகாலையில் இடம்பெற்ற கடும் நிலநடுக்கத்தில் இறந்தவர்களில் 28 பேரின் அடக்கத் திருப்பலியை, இச்செவ்வாய் மாலையில், அமாத்திரிச்சே நகருக்கு வெளியில், ஒரு பெரிய கூடாரத்தில் நிறைவேற்றிய ஆயர் பொம்ப்பிலி அவர்கள், தனது மறையுரையில் இவ்வாறு கூறினார்.

கட்டுமான தொழில்நுட்பங்கள் போதிய அளவு இல்லாததே, இந்நிலநடுக்கத்தில், மரணத்தை வருவித்த கட்டடங்கள் இடிந்ததற்கு காரணம் என்று குறை கூறினார் ஆயர் பொம்ப்பிலி.

திருத்தந்தையின் பிரதிநிதியாக, பேராயர் Konrad Krajewski அவர்களும் இக்கூட்டுத் திருப்பலியை நிறைவேற்றி, திருத்தந்தையின் ஒருமைப்பாட்டுணர்வையும் தெரிவித்தார்.

இத்தாலிய அரசுத்தலைவர் செர்ஜோ மத்தரெல்லா, பிரதமர் மத்தேயோ ரென்சி உட்பட பல அதிகாரிகள் இதில் கலந்துகொண்டு மக்களுக்கு ஆறுதல் கூறினார். பெருமளவான பொதுமக்களும் இத்திருப்பலியில் கலந்துகொண்டனர். இந்நிலநடுக்கத்தில், குறைந்தது 292 பேர் இறந்துள்ளனர். இந்நகரம், சிறிது சிறிதாக கட்டப்படும் என்று உறுதியளித்தார் பிரதமர் ரென்சி.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.