2016-08-31 16:13:00

உலகில் மனிதர் ரோபோக்களாக மாறிவரும் ஆபத்து


ஆக.31,2016. திருப்பீட நீதி மற்றும் அமைதி அவையின் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள், டச்சு கிறிஸ்தவ சமூக மாநாட்டில், இப்புதனன்று உரையாற்றினார்.

மனிதர்கள், உலகளாவியக் கருவியில், வெறும் ரோபோக்களாகவும், இயந்திரங்களாகவும் மாறிவரும் ஆபத்து காணப்படுகின்றது என்றும், இந்த அச்சுறுத்தலுக்கு எதிராகக் கிறிஸ்தவர்கள் மனித சமுதாயத்தில், தங்களின் விசுவாசத்தின் காரணங்களை விளக்க வேண்டும் என்றும் உரையாற்றினார், கர்தினால் டர்க்சன்.

இவ்வுலகில் நம் சமயக் கண்ணோட்டம், கூட்டத்தோடு சேர்ந்து சிந்திப்பதற்குப் பதிலாக, தனித்து நின்று சிந்திக்கவே, ஒருபக்கம், நம்மை இட்டுச் செல்கின்றது என்றும், மறுபக்கம், கிறிஸ்து வழியாக நாம் எல்லாரும் ஒப்புரவாக்கப்பட்டவர்கள் என்ற சிந்தனையில், ஒன்றிணைய வைக்கின்றது என்றும் கூறினார் கர்தினால் டர்க்சன்.

கிறிஸ்தவ சபைகளின் நீதி மற்றும் அமைதிப் பணிகளில், கத்தோலிக்கத் திருஅவையையும் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம், அதேபோல் கத்தோலிக்கத் திருஅவையும், இப்பணிகளில், மற்ற கிறிஸ்தவ சபைகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ளும் என்றும் அவர் உரையாற்றினார்.

125 ஆண்டுகளுக்கு முன்னதாக, ஆம்ஸ்டெர்டாமில் இந்த டச்சு கிறிஸ்தவ சமூக மாநாடு முதன் முதலில் நடந்தது என்றும், திருப்பீட நீதி மற்றும் அமைதி அவை, வருகின்ற சனவரி 6ம் தேதியோடு ஐம்பது ஆண்டுகளை நிறைவு செய்கின்றது என்றும், இதனால் இந்த மாநாடு தன்னை மிகவும் கவர்ந்துள்ளது என்றும் கூறினார் கர்தினால் டர்க்சன்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.