2016-08-31 16:32:00

இரக்கத்தின் தூதர்கள் – அருளாளர் அன்னை தெரேசா பாகம் 14


ஆக.31,2016. தொண்டின் மறுஉருவம், ஆதரவற்றோருக்கு பற்றுக்கோடு, மனிதக் குலத்துக்குக் கிடைத்த பேரருள், உதவி செய்த மனித தெய்வம், இப்படி பல புனைப்பெயர்களால் அன்பொழுகப் போற்றப்படுபவர் அருளாளர் அன்னை தெரசா. இவர், வாழும்போதே புனிதர் எனப் பலரால் வாழ்த்தப்பட்டார். செப்டம்பர் 04, வருகிற ஞாயிறன்று, திருஅவை இவரை அதிகாரப்பூர்வமாக, புனிதர் என்று அறிவிக்கிறது. இந்த முக்கியமான நிகழ்வில் கலந்துகொள்வதற்கு, திருப்பயணிகள் உரோம் நகரை நிறைத்த வண்ணம் உள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலமாக நடந்து வருகின்றன. இறைஇரக்கத்திற்கு வாழ்வால் இலக்கணம் வகுத்த அன்னையவர்கள் பற்றி, இந்த இரக்கத்தின் ஆண்டில், கடந்த பல வாரங்களாக நிகழ்ச்சிகளை வழங்கினோம். இன்று, அதன் நிறைவாக, அன்னயவர்கள் பற்றிய சிலரின் சிந்தனைகளைத் தருகின்றோம். சேவியர் அவர்கள், அன்னை தெரேசா பற்றி, அன்னை மனம் என்ற தலைப்பில் எழுதிய ஒரு கவிதை நூலுக்கு, கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள், முன்னுரையில் இப்படி சொல்லியிருக்கிறார். 

பட்டினியின் எல்லையை நம்மில் பலர் கண்டிருக்கமாட்டோம். பசியின் கண்ணீரோடு, நம் பலரின் கண்களுக்கு பரிச்சயம் இருக்காது. உங்கள் பணி, வீதியில் கிடக்கிறது. நீங்களோ வானம் பார்த்து நடக்கிறீர்கள். நான் பார்த்தேன், ஒருமுறை அழுக்கு வீதியின் ஓரத்தில் ஓர் ஏழைச் சிறுமியைக் கண்டேன். அவள் கண்களில் பட்டினியின் பரிதாபப் பார்வை, ஆயிரம் கண்களோடு விழித்துக் கிடந்தது. வாழ்வின் முதல் பக்கத்தில் நிற்கும் சிறுமி. வலியில் கடைசிக் கட்டத்தையும், தோளில் சுமக்கும் துயரம் இதயத்தைத் தாக்க, ரொட்டி ஒன்றைக் கொடுத்தேன். அந்தச் சிறுமி, அதை வேக வேகமாய் வாங்கி, மெல்ல மெல்ல தின்னத் துவங்கினாள். அவள் கண்கள் முழுதும் ஓர் பேரரசைப் பிடித்த சக்கரவர்த்தியின் சந்தோசம். அவளை அரவணைத்துக் கொண்டே நான் கேட்டேன், ரொட்டியை விரைவாய்த் தின்றால் விரைவிலேயே பசி போய் விடுமே? சிறுமி கலவரத்துடன் பதிலளித்தாள். ரொட்டி தீர்ந்து விட்டால் மீண்டும் பசிக்குமோ எனப் பயமாய் இருக்கிறது.

அன்னை தெரசா அவர்கள், கல்கத்தாவின் தெருக்களில் ஒதுக்கப்பட்டிருந்த வறியவர்களையும், கவனிப்பாரின்றிக் கிடந்தவர்களையும் அரவணைத்து, அன்போடு தொண்டாற்றியதை இவ்வாறு அழகாக கவிதை வரிகளில் பதிவு செய்திருக்கிறார் காசி ஆனந்தன். கொல்கத்தா மட்டுமல்ல, உலகின் பல நாடுகளிலும் இப்படி அன்புப் பணியாற்ற தனது சபை சகோதரிகளைத் தூண்டினார் அன்னை. இவருக்கு, 1962-ல் அமைதி மற்றும் உலகப் புரிந்துணர்வுக்கான மகசேசே விருது, 1969ல் பன்னாட்டுப் புரந்துணர்வுக்காக ஜவஹர்லால் நேரு விருது, 1972ல் திருத்தந்தை 23ம் ஜான் அவர்களின் அமைதிக்கான பரிசு, கபிரியேல் விருது, 1973ல் டெம்ப்பிள்டன் விருது, 1979ம் ஆண்டு அமைதிக்கான நொபெல் பரிசு, 1980ம் ஆண்டில் இந்திய அரசின் பாரத ரத்னா விருது, 1985ல் அமெரிக்காவின் மிக உயரிய விருதான விடுதலைக்கான அதிபர் பதக்கம் உள்ளிட்ட பல விருதுகள் வழங்கப்பட்டன. வாழ்ந்தபோது ஒரு மனிதருக்கு அஞ்சல் தலை வெளியிடப்பட்ட முதல் பெருமை அன்னை தெரசாவுக்கு மட்டுமே உரியது. தன்னைப் புகழ்ந்தவர்களிடம், கடவுள் கை காட்டிய கடமையைச் செய்கிறேன்’என்று புன்னகையுடன் விடையளித்துள்ளார் அன்னை தெரேசா.

அன்னை தெரேசா, இவ்வளவு நல்ல பண்புகளில் சிறந்து விளங்குகிறார்  என்றால், அவரின் குடும்பப் பின்னணியும் ஒரு காரணம். இவரது தாயின் வளர்ப்பு, இவரை நல்ல மனிதராக உருவாக்கியிருக்கிறது. மசடோனியா நாட்டின், ஸ்கோப்ஜேயில், அன்னையவர்களின்  வீட்டுக்குப் பக்கத்தில் ஓர் ஏழை விதவை, விலக்க இயலா வறுமையுடனும், இருட்டில் தவழும் ஏழு குழந்தைகளுடனும், குடிசை வீடொன்றில் குடியிருந்தார். அவர் வீட்டைவிட்டு வெளிச்சம் வெளியேறி வெகு நாட்களாகியிருந்தது. வறுமை உள்புகுந்தும் வருடங்களாகியிருந்தது. அன்னை தெரேசாவின் தாய், அந்த வீட்டை தனது இரண்டாம் குடும்பமாய்ப் பாவித்தார், அன்னையோ, அவ்வீட்டிற்கு உதவுவதில் எட்டாவது குழந்தையானார் என்று சொல்லப்படுகிறது. ஆக்னஸ் என்ற இயற்பெயரைக் கொண்ட அன்னை தெரேசா அவர்கள், இளம் வயதில் ஒரு முறை வீட்டில் அமர்ந்து தோழிகளோடு பேசிக் கொண்டிருந்தார். அதில் ஒரு தோழி, அந்த இடத்தில் இல்லாத ஒருவரைப் பற்றி அவதூறை அவிழ்த்து விட்டுக்கொண்டிருந்தார். இதைக் கேட்டுக்கொண்டிருந்த அன்னையின் தாய் அங்குச் சென்று, அறையில் எரிந்துகொண்டிருந்த விளக்கை அணைத்தார். ஆக்னஸ் வியந்தார். எரியும் விளக்கை ஏனம்மா அணைக்கிறீர்கள்? மின்சாரத்தை மிச்சப்படுத்தவா? இல்லை எங்களைக் கொச்சைப்படுத்தவா? என்று கேட்டார். அதற்கு அன்னையின் தாய், புறணி பேசும் இடத்தில் வெளிச்சம் எதற்கு? குருட்டுச் செயல்களுக்கு இருட்டே வெளிச்சம் என்று பதிலுரைத்தார்.

இப்படி நன்னெறியில் வளர்க்கப்பட்ட அன்னைக்கு, இறையழைப்பைப் பெற்ற பின்னர், குடும்பம் உலகமாய் இருக்கவில்லை. ஏனெனில், உலகத்தையே குடும்பமாய்ப் பார்த்தார். எனவே அன்னையவர்களின் புனிதர் பட்ட நிகழ்வில் உடலாலும், மனத்தாலும் பங்குகொள்ள இருக்கும் நாம், அன்னையின் நற்பண்புகளில் ஏதாவது ஒன்றையாவது நம் வாழ்வில் கடைப்பிடிக்க முயற்சிப்போம். கடவுள் இருப்பதாக கூறித் தொழுபவர்கள் எல்லாருமே இவரைப் போலவே இருந்தால், உலகத்தில் சாதியின் பெயராலும், மதத்தின் பெயராலும் கொடுமைகள் நிகழாது என்று ஒருவர் சொல்கிறார். நல்ல மதவாதி ஆண்டவன் பணிகளைச் செய்வான், ஆண்டவன் பணி என்பது அன்பு ஒன்றே. எனவே அன்னை தெரேசாவின் வாழ்வில் இருந்து பாடம் கற்போம்.

தேசம் கடந்து வாசம் வீசிய அந்த மனித மலர், இன்று நம்மைப் பார்த்து சொல்வதெல்லாம் ஒன்றுதான். கவனியுங்கள். வான் கனவுகளைவிட பூமிப் பாதைகளைக் கவனியுங்கள். நம்மைச் சுற்றிலும் மனிதர்கள், நம் விரல் தீண்டலுக்காய், நம் ஒரு தோழமைப் புன்னகைக்காய், நாம் நல்கப் போகும் ஒரு சிறு உதவிக்காய் காத்திருக்கிறார்கள். வீட்டு சன்னலைத் திறந்து பாருங்கள். காற்று வருவதை மட்டும் கண்மூடிக் கவனிக்காமல் சாலையில் தெரியும் மனிதர்களையும் கவனியுங்கள். அந்த இடத்தில் நாம் இருந்தால் நம் எதிர்பார்ப்புகள் எதுவாக இருக்கும் என எண்ணிப் பாருங்கள். அதுவே பணி வாழ்வின் அடிப்படை. பாதையோர ஏழையைப் பார்த்தால் ஆகாயம் பார்த்து அகன்று போகாமல், குறைந்த பட்சம் ஒரு புன்னகையைக் கொடுத்துப் போங்கள். மனித நேயம் நிறைக்காத வாழ்க்கை, அதன் அர்த்தத்தை இழக்கிறது. புன்னகை இறைக்கும் இதயங்களில்தான் வாழ்வின் மொத்தமும் இருக்கிறது. அன்பின் பணிகள், அமைதியின் பணிகள் என்கிறார் அன்னை தெரேசா.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.