2016-08-29 15:00:00

ஐரோப்பாவுக்கு புதியவழி நற்செய்திப் பணியின் அவசியம்


ஆக.29,2016. ஐரோப்பாவிலுள்ள பலர், திருமுழுக்குப் பெற்றிருந்தாலும், தாங்கள் பெற்றிருக்கும் விசுவாசம் எனும் கொடையை அவர்கள் அறிந்திருக்கவில்லை மற்றும் அவர்கள் கிறிஸ்தவ சமூகத்தின் வாழ்வில் முழுமையாகப் பங்கேற்கவில்லை என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

கிரேக்க நாட்டின் தெசலோனிக் நகரில், இஞ்ஞாயிறன்று தொடங்கியுள்ள 14வது கிறிஸ்தவ சபைகள் கருத்தரங்கிற்குச் செய்தி அனுப்பியுள்ள திருத்தந்தை, ஐரோப்பாவில் தற்போது, பல கிறிஸ்தவரின் வாழ்வு, அனைத்துக் கிறிஸ்தவ சபைகளுக்கும் ஒரு சவாலாக உள்ளது என்றும் கூறியுள்ளார்.

ஐரோப்பாவில் கிறிஸ்தவ சமூகத்திற்கு மீண்டும் நற்செய்தி அறிவிக்கப்படவேண்டியதன் அவசியம் என்ற தலைப்பில், இக்கருத்தரங்கு நடைபெற்று வருவது பற்றியும் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, ஐரோப்பா போன்று, தங்களின் கிறிஸ்தவ மூலத்தோடு, மிகக் குறைவாகவே தொடர்பு வைத்துள்ள இடங்களில், புதிய வழியில் நற்செய்தியை அறிவிக்க வேண்டியது அவசியம் என்றும் கூறியுள்ளார்.

திருத்தந்தையின் இச்செய்தி, திருப்பீட கிறிஸ்தவ ஒன்றிப்பு அவைத் தலைவர் கர்தினால் கர்ட் கோக் அவர்கள் வழியாக அனுப்பப்பட்டுள்ளது. 

உரோம் அந்தோனியானம் பாப்பிறை பல்கலைக்கழகமும், தெசலோனிக்  அரிஸ்ட்டாட்டில் பல்கலைக்கழகத்தின் ஆர்த்தடாக்ஸ் இறையியல் துறையும் இணைந்து, இக்கருத்தரங்கை நடத்துகின்றன.

ஆகஸ்ட் 28, இஞ்ஞாயிறன்று தொடங்கியுள்ள இக்கருத்தரங்கு, ஆகஸ்ட் 30 இச்செவ்வாயன்று நிறைவடையும்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.