2016-08-29 15:50:00

அன்னை தெரேசா குறித்து இந்தியர்கள் பெருமைப்பட வேண்டும்


ஆக.29,2016. அருளாளர் அன்னை தெரேசா அவர்கள், புனிதராக அறிவிக்கப்படுவது குறித்து, இந்தியர்கள் ஒவ்வொருவரும் பெருமைப்பட வேண்டும் என்று, பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இஞ்ஞாயிறன்று கூறினார்.

அருளாளர் அன்னை தெரேசா அவர்களுக்கு இஞ்ஞாயிறன்று மரியாதை செலுத்திய மோடி அவர்கள், அன்னையவர்கள் இந்தியர் அல்ல என்றாலும், தன் வாழ்வு முழுவதையும் இந்தியர்களுக்குச் சேவையாற்றுவதிலேயே செலவழித்தார் என்று கூறினார். தனது வாழ்வு முழுவதையும், இந்தியாவில் ஏழைகளுக்கும் கைவிடப்பட்டவர்களுக்குமென செலவழித்த, இத்தகைய ஒரு மனிதர் புனிதராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவது குறித்து, பெருமைப்படுவது இந்தியர்களுக்கு இயல்பானது என்றும் அவர் தெரிவித்தார்.

வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அவர்கள், 125 கோடி இந்தியர்களின் பிரதிநிதியாக, இப்புனிதர் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வார் என்றும், பிரதமர் மோடி அவர்கள் அறிவித்தார்.

1929ம் ஆண்டு சனவரி 6ம் தேதி கொல்கத்தா வந்த அன்னை தெரேசா, 1979ம் ஆண்டில் நொபெல் அமைதி விருது உட்பட சிறப்பான பல விருதுகளைப் பெற்றிருப்பவர்.

ஆதாரம் : IANS / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.