2016-08-29 15:55:00

அணுப் பரிசோதனைகளுக்கு எதிரான உலக நாள் ஆகஸ்ட் 29


ஆக.29,2016. அணுப் பரிசோதனைகளின் ஆபத்தான விளைவுகளைக் கண்முன்கொண்டு, உலகினர் அனைவரும் இந்நடவடிக்கையைக் கைவிடுமாறு, அணுப் பரிசோதனைகளுக்கு எதிரான உலக நாளில் கேட்டுக்கொள்வதாக, ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் அவர்கள் கூறினார்.

ஆகஸ்ட் 29, இத்திங்களன்று கடைப்பிடிக்கப்பட்ட அணுப் பரிசோதனைகளுக்கு எதிரான உலக நாளுக்கென வெளியிட்டுள்ள செய்தியில் இவ்வாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

உலகில், அணு ஆயுதப் பரிசோதனை தடை ஒப்பந்தம் கொண்டுவரப்பட்டு இருபது ஆண்டுகள் ஆகியும், இன்னும் உலகம், அணு ஆயுதமற்ற இடமாக மாறவில்லை என்றும் அவரின் செய்தி கூறுகின்றது. 

450க்கும் மேற்பட்ட அணுப் பரிசோதனைகள் நடத்தப்பட்ட கஜகஸ்தான் Semipalatinsk மையம் மூடப்பட்டு இந்நாளோடு 25 ஆண்டுகள் நிறைவடைகின்றன, இதில் பாதிக்கப்பட்டவர்கள், மத்திய ஆசியா, வட ஆப்ரிக்கா, வட அமெரிக்கா மற்றும் தென் பசிபிக் பகுதியில் குடியேறியுள்ளனர் என்றும் பான் கி மூன் கூறியுள்ளார்.

1945ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி முதல் முறையாக, அணு ஆயுதப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதிலிருந்து, இத்தகைய நடவடிக்கைகள் ஏறத்தாழ இரண்டாயிரம் நடத்தப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

ஆதாரம் : UN/ வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.