2016-08-27 16:14:00

ஆசியா பீபியின் மரண தண்டனை மாற்றப்படும்,கிறிஸ்தவர்கள்


ஆக.27,2016. பாகிஸ்தானில், தெய்வநிந்தனை குற்றத்தின்பேரில், மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள, கிறிஸ்தவப் பெண் ஆசியா பீபி அவர்களின் தண்டனையை, உச்ச நீதிமன்றம் மாற்றும் என்ற நம்பிக்கையை வெளியிட்டுள்ளனர் அந்நாட்டு கத்தோலிக்கத் திருஅவை அதிகாரிகள்.

ஆசியா பீபி அவர்கள், சக பெண்களிடம் முஸ்லிம் மதத்திற்கு எதிராக பேசியதாக குற்றச்சாட்டப்பட்டு, 2009ம் ஆண்டில் தெய்வநிந்தனை குற்றத்தின்பேரில், 2010ம் ஆண்டு ஜூலையில், மரண தண்டனை விதிக்கப்பட்டார்.

ஆயினும், இத்தண்டனையை நிறுத்தி வைத்துள்ள பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், வருகிற அக்டோபர் இரண்டாவது வாரத்தில், இவ்வழக்கை மீண்டும் விசாரிக்கவுள்ளது.

இந்த வழக்கை தற்போது எடுத்து நடத்தும் முஸ்லிம் வழக்கறிஞர் Saif-ul-Malook அவர்கள், ஆசியா பீபி விடுவிக்கப்படுவார் என்பதில் தான் மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பதாகவும், தனக்கு மிரட்டல்கள் வந்தாலும், தனது நிலைப்பாட்டில் தான் உறுதியாய் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இதற்கிடையே, ஐந்து குழந்தைகளுக்குத் தாயான ஆசியா பீபி அவர்கள், சிறைக்கு அனுப்பப்படுவதற்கு முன்னர், அவர்மீதான தெய்வநிந்தனை குற்றச்சாட்டால், அவரும், அவரின் பிள்ளைகளும் ஒரு கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானார்கள் என்று, பிரித்தானிய பாகிஸ்தான் கிறிஸ்தவ கழகம் கூறியதாக, UCA செய்தியில் கூறப்பட்டுள்ளது.    

ஆதாரம் : UCAN/ வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.