2016-08-26 16:20:00

புனித கிளாரா ஆதீன சகோதரிகளுடன் சேர்ந்து திருத்தந்தை செபம்


ஆக.26,2016. இவ்வியாழனன்று, வத்திக்கானிலுள்ள சாந்தா மார்த்தா சிற்றாலயத்தில், நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காகத் திருப்பலி நிறைவேற்றி செபித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்திருப்பலியில் பங்குபெற்ற, புனித கிளாரா உர்பான் அடைபட்ட துறவு சபை சகோதரிகளுடன் சேர்ந்து செபித்த திருத்தந்தை, இச்சகோதரிகள், செபம் மற்றும் தங்களின் வாழ்வு வழியாக, பிறரோடு கிறிஸ்துவைப் பகிர்ந்துகொள்ளவும், நம்பிக்கையை விதைக்கவும் அழைப்பு விடுத்தார்.

நம்மிடம் ஒன்றுமே இல்லாதபோதும்கூட, இயேசுவே, நம் உண்மையான செல்வம் என்றும், இச்சகோதரிகளிடம் கூறினார் திருத்தந்தை.

இரக்கத்தின் யூபிலி ஆண்டுச் சூழலில், திருத்தந்தை  பிரான்சிஸ், இச்சகோதரிகளை வத்திக்கானுக்கு அழைத்து, தான் நிறைவேற்றிய இத்திருப்பலியில் கலந்து கொள்ளச் செய்தார்.

இச்சகோதரிகள், இத்தாலியின் உம்பிரியா மாநிலத்தில், ஸ்பெல்லோ எனும் ஊரிலுள்ள, வாலேகுளோரியா புனித மரியா ஆதீனத்தில் வாழ்கின்ற புனித ஏழை கிளாரா சபையினர் ஆவர். இவர்கள், 1997ம் ஆண்டில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள். இந்த ஆதீனம், 560ம் ஆண்டில், புனித பெனடிக்டைப் பின்சென்றவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர், 1230ம் ஆண்டில், அசிசி நகர் புனித கிளாராவின் இரு சீடர்களாகிய பல்பினாவும், பசிபிக்காவும் இந்த ஆதீனத்தைச் சீர்திருத்தம் செய்தனர். 1263ம் ஆண்டில் திருத்தந்தை 4ம் உர்பான் அவர்கள் இச்சபையின் கொள்கைகளை அங்கீகரித்தார். எனவே இச்சபை, புனித கிளாரா உர்பான் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.