2016-08-26 16:04:00

அறவழிமுறை : அமைதிக்கு ஓர் அரசியல் வழியாகும்


ஆக.26,2016. “அறவழிமுறை : அமைதிக்கு ஓர் அரசியல் வழியாகும்” என்ற தலைப்பை, 2017ம் ஆண்டு சனவரி முதல் நாள் சிறப்பிக்கப்படும் ஐம்பதாவது உலக அமைதி நாளுக்கென, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தேர்ந்தெடுத்துள்ளார்.

ஒரு சமுதாயத்தைச் சமைப்பதற்கு, வன்முறையும், அமைதியும் இரு எதிர்மாறான வழிகள் என்றும், வன்முறையைப் பரப்புவது, மிகக் கடுமையான எதிர்மறை சமூக விளைவுகளை உற்பத்தி செய்கின்றன என்றும் திருப்பீடம் கூறியுள்ளது.

மூன்றாம் உலகப் போர் துண்டு துண்டாக இடம்பெறுகின்றது என்று, இக்கால நிலவரத்தை, திருத்தந்தை, சுருக்கமாகச் சொல்லியிருப்பதையும் திருப்பீடம் நினைவுபடுத்தியுள்ளது,

எந்தவிதப் பாகுபாடும் இன்றி, ஒவ்வொரு மனிதரின் உரிமைகளும், சம மாண்பும் பாதுகாக்கப்பட்டால், அரசியல் செயல்முறையாகப் புரிந்துகொள்ளப்படும் அகிம்சை என்ற அறவழி, ஆயுத மோதல்களை நிறுத்துவதற்கு, உண்மையான வழிகளை உருவாக்கும் என்று, திருத்தந்தையின் இத்தலைப்பு அறிவுறுத்துவதாக, திருப்பீடம் கூறியுள்ளது.

ஆயுத வர்த்தகம் பரவலாக இடம்பெறுகின்றது மற்றும் இது பொதுவாக கண்டுகொள்ளப்படுவதில்லை எனவும், சட்டத்திற்குப் புறம்பே இடம்பெறும் ஆயுத வர்த்தகம், உலகின் சில சண்டைகளுக்கு மட்டும் ஆதரவு வழங்கவில்லை எனவும், அறவழிமுறையை ஓர் அரசியல் செயலாகக் கையாண்டால், உலகின் ஆயுத மோதல்கள் என்ற வடுவை நிறுத்த முடியும் மற்றும் நிறுத்த வேண்டும் எனவும் திருத்தந்தையின் இத்தலைப்பு வலியுறுத்துகிறது.  

அருளாளர் திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட, உலக அமைதி நாள், ஒவ்வோர் ஆண்டும் சனவரி முதல் நாள் சிறப்பிக்கப்படுகின்றது. இந்த நாளுக்கான திருத்தந்தையின் செய்தி, உலகின் அனைத்து வெளியுறவு அமைச்சர்களுக்கும் அனுப்பப்படுகின்றது.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.