2016-08-25 16:26:00

வர்த்தகமயமாகும் வாடகைத் தாய்முறைக்குத் தடை


ஆக.25,2016. இந்தியாவில், வாடகைத் தாய்முறை வர்த்தகமயமாவதைத் தடை செய்யும் புதிய மசோதாவுக்கு, மத்திய அமைச்சரவை இப்புதனன்று ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, எதிர்வரும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மசோதா, சட்டமாக்கப்பட்டால், வெளிநாட்டவர், இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட வெளிநாட்டவர், தனியாக இருக்கும் பெற்றோர், ஓரீனச் சேர்க்கையாளர்கள் உள்ளிட்டோர், வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வது தடை செய்யப்படும்.

குழந்தைப்பேறு இல்லாத தம்பதிகள், திருமணமாகி ஐந்தாண்டுகள் ஆகியும் குழந்தைப் பேறு இல்லாதவர்கள் ஆகியோர் மட்டுமே வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற முடியும். அதுவும், நெருங்கிய உறவினர் மூலமாகவே வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற முடியும் என்று, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இச்சட்டத்தை மீறுகிறவர்களுக்கு, பத்தாண்டு காலம் வரை சிறைதd தண்டனையும், பத்து இலட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும் எனவும், சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார்.

இந்தியாவில், வாடகைத்தாய் தொழில்முறை வழியாக, ஒவ்வோர் ஆண்டும் ஏறத்தாழ 500 கோடி டாலர் கிடைப்பதாகவும், இது, 500க்கு மேற்பட்ட மருத்துவமனைகளில் நடத்தப்படுவதாகவும் சொல்லப்பட்டுள்ளது.  

கிராமப்புறப் பெண்கள் மற்றும் பழங்குடியினப் பெண்களுக்கு பண ஆசை காட்டியும், மூளைச்சலவை செய்தும் வாடகைத் தாயாக செயல்பட அனுமதிக்க வைக்கப்படுவதாகத் தெரிகிறது. இதைத் தவிர, வெளிநாடுகளில் இருந்தும் பலர், இந்தியப் பெண்களை வாடகைத் தாய் முறைக்கு உட்படுத்தி குழந்தை பெறுகின்றனர்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.