2016-08-25 15:46:00

இத்தாலி நிலநடுக்கப் பகுதியில் வத்திக்கான் மீட்புப் பணியாளர்


ஆக.25,2016. இத்தாலியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுடன் தனது ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிக்கும் நோக்கத்தில்,  வத்திக்கான் காவல்துறை குழு ஒன்றை, இவ்வியாழனன்று அப்பகுதிக்கு அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆகஸ்ட் 24, இப்புதன் அதிகாலை 3.36 மணிக்கு இடம்பெற்ற சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் தடைமட்டமாகியுள்ள, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமாத்திரிச்சே நகருக்கு இக்குழு சென்றுள்ளது.

இந்நகர் மக்களுடன் திருத்தந்தையின் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்து, அம்மக்களுக்குத் தேவையான உதவிகளையும், பாதுகாப்பையும் இக்குழு வழங்கும் என, திருப்பீட செய்தித் தொடர்பகம் அறிவித்துள்ளது.

மேலும், வத்திக்கான் தீயணைப்புப் படையின் ஆறு பேர் கொண்ட குழுவும், இப்புதனன்று இப்பகுதிக்குச் சென்று, அங்கு மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ள குழுக்களுக்கு உதவி வருகிறது.

இந்நிலநடுக்கத்தினால் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டுள்ள அமாத்திரிச்சே மற்றும் அதற்கருகிலுள்ள சிறிய நகரங்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 240ஐத் தாண்டியுள்ளது மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 270. மேலும், இடிபாடுகளில் இன்னும் சிக்கி உயிருடன் இருப்பவர்களை மீட்க, மீட்புக் குழுவினர் போராடி வருகின்றனர்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.