2016-08-24 16:35:00

மறைக்கல்வியுரை : பாதிக்கப்பட்ட மக்களுக்காக செபிப்போம்


ஆக.,24,2016. இத்தாலிக்கு இந்தப் புதன்கிழமை, ஒரு சோகம் நிறைந்த நாளாகவே விடிந்தது. ஆம். மத்திய இத்தாலியில், அதாவது உரோம் நகருக்கு ஏறத்தாழ 80 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ரியேத்தி நகரைச் சுற்றியுள்ள சிறு நகர்கள் பல, நிலஅதிர்ச்சியால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.  அமாத்திரிச்சே, அக்குமோலி, பெஸ்காரா தெல் தொரோந்தோ ஆகிய நிறு நகரங்கள்  அழிவுக்குள்ளாகியுள்ளன, அதிலும் குறிப்பாக அமாத்திரிச்சே என்ற அழகிய நகர். இந்த சோக நிகழ்வால், வழக்கமான புதன் மறைக்கல்வி உரையில் இடம்பெறும், இரக்கத்தின் யூபிலி ஆண்டு தொடர் சிந்தனைகளுக்குப் பதிலாக, இந்த நிலஅதிர்ச்சியால் பாதிக்கப்பட்டோருக்காக செபத்தை வழி நடத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நம் மறைக்கல்வி தொடர் உரையை அடுத்த வாரத்திற்கு தள்ளி வைக்கிறேன். இவ்வார உரை நேரத்தில், மத்திய இத்தாலியின் நிலஅதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிலஅதிர்ச்சியால் பலர் உயிரிழந்துள்ளது மற்றும் காயமடைந்துள்ளது குறித்து என் உள்மன வேதனையை இந்நேரத்தில் வெளியிடுகிறேன். வழக்கம்போல் இன்றும் உங்களுடன் பகிர்வதற்காக என் மறைக்கல்வி உரையைத் தயாரித்து வைத்திருந்தேன். ஆனால், நிலஅதிர்ச்சியின் பாதிப்புக்களைக் கேள்விப்பட்டதும், என் ஆழ்ந்த கவலையையும், ஆன்மீக நெருக்கத்தையும், பாதிக்கப்பட்ட மக்களுடன் பகிர்ந்து கொள்வதே முக்கியம் என கருதுகிறேன். நான் தயாரித்து வைத்துள்ள உரையை அடுத்த வாரம் நோக்கலாம். இந்த இயற்கைப் பேரிடரில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்துள்ளவர்களுக்கு என் அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன், இந்த இடிபாடுகளில் சிக்கியுள்ள தங்கள் உறவினர்கள் குறித்த அச்சத்திலும் பதட்டத்திலும் வாழும் மக்களுக்கு என் ஆன்மீக நெருக்கத்தையும் ஆதரவையும் தெரிவிக்கிறேன். அமாத்திரிச்சே நகர் முற்றிலும் அழிந்துவிட்டது என்பதையும், அங்கு உயிரிழந்துள்ளோரில் சிறாரும் உள்ளடக்கம் என்பதையும் அந்நகர் மேயர் கூறக்கேட்டபோது, மிகவும் வேதனையுற்றேன். அக்குமோலி, அமாத்திரிச்சே, ரியேத்தி மறைமாவட்டம், அஸ்கொலி பிச்சேனோ ஆகிய இடங்களில் உள்ள மக்களுக்கும், லாட்சியோ, உம்பிரியா மற்றும் லெ மார்க்கே  மாவட்டங்களின் அனைத்து மக்களுக்கும் என் செபங்களுக்கான உறுதியைக் கூறுவதுடன், அகில உலக திருஅவையின் நெருங்கிய ஒருமைப்பாட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துன்பகரமான வேளையில் திருஅவை, தன் இரக்கம் நிறை அன்பை வெளிப்படுத்துவதோடு, இந்த தூய பேதுரு வளாகத்தில் தற்போது கூடியிருக்கும் திருப்பயணிகளின் ஆழ்ந்த அக்கறையையும் தெரிவிக்கிறது. துயருறும் இம்மக்களிடையே பணிபுரியும் தன்னார்வலர்களுக்கு என் நன்றியை வெளியிடுகிறேன். அதேவேளை, எப்போதும் மக்களின் துன்பங்கள் குறித்து இரக்கமுள்ளவராக இருக்கும் இயேசுவை நோக்கி, இம்மக்களுக்காகச் செபிக்குமாறு உங்களிடம் கேட்கிறேன். உள்ளம் நொறுங்கியவர்களுக்கு இயேசு ஆறுதல் அளிப்பாராக. அன்னை மரியின் பரிந்துரை வழியாக, அவர்களுக்கு அமைதி கிட்டுவதாக. இயேசுவோடு இணைந்து நம் இதயங்களும் கருணையுடன் செயல்படுவதாக. இன்றைக்குரிய மறைக்கல்வி உரையை அடுத்த வாரம் நோக்குவோம். அதேவேளை இப்போது, துக்கத்தின் மறையுண்மைகளை தியானித்து செபமாலை சொல்வோம்.

இவ்வாறு கூறியை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அங்கு குழுமியிருந்த மக்களோடு இணைந்து செபமாலை செபித்தார். பின்னர் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.