2016-08-24 16:38:00

நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக திருத்தந்தை செபம்


ஆக.24,2016. “நிலநடுக்கம் தாக்கிய இடங்களிலுள்ள அனைத்து மக்களுடனும் மிக நெருக்கமாக இருக்கிறேன் மற்றும், இந்நிலநடுக்கம் மிகுந்த வேதனையைத் தந்துள்ளது என்பதைத் தெரிவிக்கிறேன்” என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில், இப்புதனன்று வெளியாயின.

இத்தாலியின் மத்திய பகுதியில், இப்புதன் அதிகாலை 3.36 மணியிலிருந்து அவ்வப்போது இடம்பெற்ற நிலநடுக்கத்தில் இறந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுடன் தனது ஒருமைப்பாட்டுணர்வையும் செபத்தையும் தெரிவிக்கும் வகையில் தனது டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை.

மேலும், இப்புதன் காலையில், வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் நடைபெற்ற வழக்கமான பொது மறைக்கல்வியுரையிலும், இத்தாலியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காகச் செபித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இப்புதன் பொது மறைக்கல்வியுரைக்கென ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த இரக்கம் பற்றிய உரையை வழங்காமல், பேதுரு வளாகத்தில் அமர்ந்திருந்த ஏறத்தாழ 11 ஆயிரம் விசுவாசிகள் மற்றும் திருப்பயணிகளோடு சேர்ந்து, செபமாலையின் துக்கத்தின் மறையுண்மைகளைச் செபித்தார் திருத்தந்தை.

உரோம் நகருக்கு தென்கிழக்கே, ஏறத்தாழ நூறு மைல்கள் தூரத்தில், அமாத்திரிச்சே மற்றும் அக்குமோலி நகரங்களுக்கு இடைப்பட்ட பகுதியில்,  இப்புதன் அதிகாலை, 3.36 மணிக்கு ஆரம்பித்த நிலநடுக்கத்தில், அறுபதுக்கு மேற்பட்ட மக்கள் இறந்துள்ளனர், நூற்றுக்கும் மேற்பட்டோரை, இடிபாடுகளுக்கிடையில் தேடும் பணியும் தீவிரமடைந்துள்ளது மற்றும் பலர் காயமடைந்துள்ளனர். 

சுற்றுலாப் பயணிகள் விரும்பிச் செல்லும் அமாத்ரிச்சே நகர், தரை மட்டமாகியுள்ளது. பிற இடங்களில் வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டடங்கள் கடுமையாய்ச் சேதமடைந்துள்ளன.

இந்த நிலநடுக்கத்தில், குறைந்தது இரண்டு பெரிய அளவிலும், மற்றவை சிறிய அளவிலும் இடம்பெற்றன என்று கூறப்படுகின்றது. வத்திக்கான் தீயணைப்புப் படையினர் உட்பட, மீட்புப் பணிகளில், பலர் ஈடுபட்டுள்ளனர்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.