2016-08-23 15:29:00

திருத்தந்தையின் இஸ்லாம் பற்றிய கருத்துக்கு மத குரு பாராட்டு


ஆக.23,2016. இஸ்லாம், பயங்கரவாதத்திற்கு சமமானதல்ல என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஸ்லாம் மதம் பற்றி அண்மையில் கூறிய கருத்துகளுக்கு, நன்றி தெரிவித்து, கடிதம் ஒன்றை, திருத்தந்தைக்கு எழுதியுள்ளார், ஈரானின் இஸ்லாமிய மூத்த சமயத் தலைவர் ஒருவர்.

ஈரானின் Qom இஸ்லாம் சமயத்தலைவர் Naser Makarem Shirazi அவர்கள், தான் திருத்தந்தைக்கு எழுதியுள்ள இக்கடிதத்தை, தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கடந்த ஞாயிறன்று வெளியிட்டார்.

வன்முறையின் மதங்கள் என்று, மதங்களைக் குறைகூறும் நிலைகள் ஏற்படும்போது, சமயத் தலைவர்கள் தெளிவான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பது அவசியம் என்றும் வலியுறுத்திக் கூறியுள்ளார் Makarem Shirazi.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அண்மையில் போலந்துக்குத் திருத்தூதுப்பயணம் மேற்கொண்டபோது, இஸ்லாம், பயங்கரவாதத்திற்கு சமமானதல்ல என்றும், வன்முறை மற்றும் கொடூரச் செயல்களைச் செய்வோர், இறைவனால் அனுப்பப்பட்ட எந்த மதங்களோடும் தொடர்பில்லாதவர்கள் என்றும் திருத்தந்தை கூறியதற்கு நன்றி தெரிவித்துள்ளார் ஈரான் சமயத் தலைவர்.

மனிதமற்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் தீவிரவாதக் குழுக்களோடு, இஸ்லாம் மதத்தை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மிகுந்த ஞானத்தோடும், அறிவுத்தெளிவோடும், தொடர்பறுத்துப் பேசினார் என்றும் பாராட்டியுள்ளார் பெரிய சமய குரு Makarem Shirazi.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த ஜூலை 31ம் தேதியன்று, போலந்து திருத்தூதுப்பயணத்தை நிறைவு செய்து திரும்பிய விமானப் பயணத்தில், நிருபர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளித்தபோது இஸ்லாம் பற்றிய தனது இக்கருத்தைத் தெரிவித்தார்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.