2016-08-23 16:01:00

அரபு நாட்டிலே தொடர்ந்து பணியாற்ற விரும்புகிறேன்


ஆக.23,2016. தான் அரபு உலகில் 47 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து மறைப்பணியாற்றுகிறேன் என்றால், கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் மத்தியில், நான் எனது உடன்பிறப்புக்களைக் காண்பதே அதற்குக் காரணம் என்று, ஆயர் ஒருவர் கூறினார்.

மக்கள் மத்தியில் நட்புறவை வளர்க்கும் நோக்கத்தில், இத்தாலியின் ரிமினி நகரில் நடைபெற்றுவரும் ஒரு வாரக் கூட்டத்தில் இவ்வாறு அறிவித்தார், வட அரேபியாவின் அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் கமிலோ பாலின்.

இத்தாலியின் விச்சென்சா மறைமாவட்டத்தில் பிறந்த கொம்போனி சபையைச் சேர்ந்த, 72 வயதாகும் ஆயர் பாலின் அவர்கள், நற்செய்தி அறிவிப்பும், பல்சமய உரையாடலுமே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்தார்.

பஹ்ரைன், கத்தார், குவைத், சவுதி அரேபியா ஆகிய நாடுகளின் அப்போஸ்தலிக்க நிர்வாகியாகிய ஆயர் பாலின் அவர்கள், அரபு நாடுகளிலேயே தான் தொடர்ந்து மறைப்பணியாற்ற விரும்புவதாகவும் தெரிவித்தார்.

பஹ்ரைன், குவைத் ஆகிய நாடுகளில், இஸ்லாம் அரசு மதமாகவும், ஷாரிய சட்டமே, அந்நாடுகளின் சட்டத்தின் முக்கிய கூறாகவும் இருக்கின்றன. மேலும், சவுதி அரேபியாவில், இஸ்லாமைத் தவிர, பிற மத வழிபாடுகள் அனுமதிக்கப்படுவதில்லை மற்றும், ஒருவர் தனது மத நம்பிக்கை பற்றிப் பேசுவதுகூட தடை செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார் ஆயர் பாலின்.        

ஆதாரம் :  Zenit / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.