2016-08-23 15:23:00

அடிமைமுறையின் புதிய வடிவங்கள் மானுடத்திற்கெதிரான குற்றங்கள்


ஆக.23,2016. “மனித மற்றும் உடலுறுப்பு வர்த்தகம், கட்டாயத் தொழில், பாலியல் தொழில் போன்ற அடிமைமுறையின் புதிய வடிவங்கள், மனித சமுதாயத்திற்கெதிரான உண்மையான குற்றங்கள்” என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில், இச்செவ்வாயன்று வெளியிடப்பட்டுள்ளன.

அடிமை வர்த்தகம் மற்றும், அது ஒழிக்கப்பட்டதை நினைவுகூரும் உலக நாளை, ஆகஸ்ட் 23, இச்செவ்வாயன்று, ஐ.நா.வின் யுனெஸ்கோ நிறுவனம் கடைப்பிடித்தவேளை, திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியும், இந்த உலக நாளையொட்டியதாய் அமைந்துள்ளது.

இக்கால நவீன அடிமைமுறைகளில், 4 கோடியே 58 இலட்சம் பேர் சிக்கியுள்ளனர் என்று, ஒரு புள்ளி விபரம் கூறுகிறது.

1791ம் ஆண்டு ஆகஸ்ட் 22க்கும், 23ம் தேதிக்கும் இடைப்பட்ட இரவில், தற்போதைய ஹெய்ட்டி மற்றும் தொமினிக்கன் குடியரசு நாடுகளில், அதாவது, அப்போதைய சாந்தோ தொமிங்கோ தீவில், அடிமை வர்த்தகத்திற்கு எதிராக எழுந்த பெரும் புரட்சியின் நினைவாக, யுனெஸ்கோ நிறுவனம், ஒவ்வோர் ஆண்டும், ஆகஸ்ட் 23ம் தேதியன்று, இந்த உலக நாளை கடைப்பிடித்து வருகிறது.

ஆப்ரிக்கா, ஐரோப்பா, அமெரிக்கா, கரீபியன் இவற்றுக்கிடையே, அட்லாண்டிக் பெருங்கடல் வழியாக, ஏறத்தாழ 400க்கும் மேற்பட்ட ஆண்டுகள் நடைபெற்ற மனித வர்த்தகத்திற்கு, ஒரு கோடியே 50 இலட்சத்திற்கு மேற்பட்ட ஆண்களும், பெண்களும், சிறாரும் பலியானார்கள். இது மனித வரலாற்றின் இருண்ட அத்தியாயங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.