2016-08-20 14:56:00

இது இரக்கத்தின் காலம் –ஒலிம்பிக் விளையாட்டுக்களா? போட்டிகளா?


19ம் நாற்றாண்டின் இறுதியில், ஒலிம்பிக் விளையாட்டுக்களை மீண்டும் உயிர்பெறச் செய்தவர்களில் ஒருவராகிய Pierre de Coubertin அவர்கள் கூறிய சொற்கள், ஒவ்வொரு ஒலிம்பிக் விளையாட்டுக்களின்போதும் நினைவுகூரப்படுகின்றன. “வெற்றிபெறுவதல்ல, பங்கேற்பதே ஒலிம்பிக் விளையாட்டுக்களில் முக்கியம். வாழ்விலும், வெற்றிபெறுவது அல்ல, தகுந்த முறையில் போராடுவதே, மிக அவசியம்.” இந்த வார்த்தைகளுக்கு உயிர்தந்த ஒரு நிகழ்வு, ரியோ ஒலிம்பிக் விளையாட்டுத் திடலில் இடம்பெற்றது.

Nikki Hamblin என்ற நியூஸிலாந்து பெண்ணும், Abbey D'Agostino என்ற அமெரிக்க பெண்ணும் 5000 மீட்டர் தேர்வுப் பந்தயத்தில் ஓடிக்கொண்டிருந்தபோது, ஒருவர் மீது ஒருவர் இடித்து, தடுமாறி வீழ்ந்தனர். போட்டி என்ற வெறியில் அவர்கள் ஓடியிருந்தால், இந்த விபத்து நிகழ்ந்ததற்கு, ஒருவர், ஒருவரைக் குற்றம் சாட்டியிருப்பர். ஆனால், அவ்விரு பெண்களும் ஒருவருக்கொருவர் உதவி செய்து, பந்தயத்தை முடித்தனர். முடிவுக் கோட்டைத் தாண்டிய இருவரும், ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டபோது, விளையாட்டு அரங்கம் கரவொலியால் நிறைந்தது. அவ்விருவரும் அந்தப் பந்தயத்தில் பதக்கம் எதுவும் வெல்ல முடியவில்லை. ஆனால், அரங்கத்தில் இருந்த ஆயிரமாயிரம் பார்வையாளர்கள், மற்றும் ஊடகங்கள் வழியே பல கோடி மக்கள் அனைவரின் உள்ளங்களையும் அவர்கள் வென்றனர்.

இதைக்குறித்து பேட்டியளித்த Nikki அவர்கள், "நான் ஒரு பதக்கம் வென்றிருந்தால், அது எவ்வளவு காலம் மக்கள் மனங்களில் பதிந்திருக்கும் என்று தெரியவில்லை. ஆனால், இன்னும் 20 ஆண்டுகள் சென்றபின், இந்த நிகழ்வை நான் மீண்டும் திரும்பிப் பார்க்கும்போது, அது எனக்கு மனநிறைவைத் தரும். அது நிச்சயம்" என்று கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.