2016-08-19 15:46:00

இது இரக்கத்தின் காலம்: என்ன படிப்பினையை விட்டுச் செல்கிறோம்?


ஒரு நாள் தன் தந்தையை ஓர் உயர்தர உணவு விடுதிக்கு அழைத்துச் சென்றான் மகன். தந்தையோ வயது முதிர்ந்தும், கொஞ்சம் இயலாமலும் இருந்தார். அவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, சோற்றுப் பருக்கைகளும், உணவுத் துண்டுகளும் அவரது சட்டையிலும், தரையிலும் விழுந்து கொண்டிருந்தன. பக்கத்து மேசைகளில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள், இதைப் பார்த்து, முகம் சுளித்து, மகனைப் பார்த்து முறைத்தனர். ஆனால், மகனோ, மிகவும் அமைதியாக, அப்பா சாப்பிடுவதையே பார்த்துக் கொண்டிருந்தான். இருவரும் சாப்பிட்டு முடித்ததும், மகன் எந்தத் தயக்கமும் இல்லாமல், தனது தந்தையை, கழிப்பறைக்கு அழைத்துச் சென்று, அவரது முகத்திலும் ஆடையிலும் ஒட்டி இருந்த உணவுப் பருக்கைகளை துடைத்துக் கழுவி, அவரது தலையை வாரி, அவரது கண்ணாடியையும் துடைத்து, அவருக்கு மாட்டினான். இருவரும் ஓய்வு அறையில் இருந்து வெளியில் வந்தபோது, உணவு விடுதி அமைதியானது. உணவிற்கான பணத்தை செலுத்தி விட்டு, தனது தந்தையை கவனமாக அழைத்துச் செல்ல தயாரானான் மகன். அப்போது அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களில் ஒருவர் எழுந்து, “எதையாவது விட்டுவிட்டுச் செல்கிறீர்களா?” என்று கேட்டார். மகனோ, “இல்லையே, நான் எதையும் விட்டுச் செல்லவில்லையே” என்றார். அதற்கு அந்த மனிதர், “இல்லை, நீங்கள் இங்கு சிலவற்றை விட்டுவிட்டுச் செல்கிறீர்கள்; இளையோருக்கு ஒரு பாடத்தை விட்டுவிட்டுச் செல்கிறீர்கள், அதோடு, எல்லாப் பெற்றோருக்கும் நம்பிக்கையை விட்டுவிட்டுச் செல்கிறீர்கள்” என்று சொன்னதும், அந்த உணவு விடுதியே மிக அமைதி ஆனது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.