2016-08-18 15:41:00

வத்திக்கானில் புதிய பணிகளை ஏற்கும் பேராயர் வின்சென்சோ பாலியா


ஆக.18,2016. குடும்பப் பணி திருப்பீட அவையின் தலைவராகப் பணியாற்றிவந்த பேராயர் வின்சென்சோ பாலியா அவர்களை, வாழ்வை ஆதரிக்கும் பாப்பிறை கல்விக் கழகத்தின் தலைவராக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதனன்று நியமித்துள்ளார்.

இதுவரை இப்பொறுப்பில் இருந்த 78 வயதான ஆயர் இஞ்ஞாசியோ கர்ராஸ்க்கோ தே பவுலா (Ignacio Carrasco de Paula) அவர்களுக்குப் பதிலாக, பேராயர் பாலியா அவர்கள் இப்பொறுப்பை ஏற்கிறார்.

71 வயதான பேராயர் பாலியா அவர்கள், கடந்த 16 ஆண்டுகளாக ஆயராகப் பணியாற்றி வருபவர் என்பதும், குடும்பப் பணிகள் திருப்பீட அவையின் தலைவராக கடந்த 4 ஆண்டுகள் பணியாற்றி வந்த இவர், இத்தாலியில் இயங்கிவரும் Sant'Egidio பிறரன்புக் குழுமத்தை நிறுவியவர்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கன.  

பேராயர் பாலியா அவர்களை, 2ம் ஜான்பால் பாப்பிறை நிறுவனத்தின் தலைமை வேந்தராகவும் நியமித்துள்ள திருத்தந்தை, இந்நிறுவனத்தின் தலைவராக, அருள்பணி Pierangelo Sequeri அவர்களை நியமித்துள்ளார்.

மிலான் நகரில், இறையியல், மற்றும் மெய்யியல் பேராசிரியராகவும், இசை வல்லுநராகவும் பணியாற்றி வந்துள்ள, 72 வயதான அருள்பணி Sequeri அவர்கள், கடந்த ஆண்டு மிலான் நகரில் நடைபெற்ற பன்னாட்டு EXPO கண்காட்சித் திடலில், திருப்பீட அரங்கத்தின் திறப்பு விழாவில் இசைக்கப்பட்ட பாடல்களை உருவாக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.