2016-08-18 15:48:00

பொதுநிலையினருக்கு திருஅவையில் உரிய இடம் -ஆயர் கெவின் ஃபாரேல்


ஆக.18,2016. குடும்பங்களை மையப்படுத்தி, 'அன்பின் மகிழ்வு' என்ற தலைப்பில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதியுள்ள திருத்தூது அறிவுரை மடல், உலகெங்கும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள வேளையில், குடும்பங்களுக்குப் பணியாற்ற தனக்கு திருத்தந்தை விடுத்துள்ள அழைப்பு, தனக்கு மகிழ்வையும், பணிவான உணர்வையும் தருகின்றது என்று, திருப்பீட உயர் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள ஒருவர் கூறினார்.

பொதுநிலையினர், குடும்பம், வாழ்வு திருப்பீட அவை என்ற புதிய அவையை உருவாக்கி, அதன் தலைவராக திருத்தந்தையால் நியமிக்கப்பட்டுள்ள ஆயர் கெவின் ஜோசப் ஃபாரேல் (Kevin Joseph Farrell) அவர்கள், வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார்.

பொதுநிலையினருக்கு திருஅவையில் உரிய இடம் அளித்து, அவர்களது பணிகளை வளர்ப்பது, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திருப்பீட அவையின் தலையாயப் பணி என்று, ஆயர் ஃபாரேல் அவர்கள் சுட்டிக்காட்டினார்.

ஆயர் ஃபாரேல் அவர்களின் மூத்த சகோதரர், ஆயர் பிரையன் ஃபாரேல் (Brian Farrell) அவர்கள், கடந்த சில ஆண்டுகளாக, கிறிஸ்தவ ஒன்றிப்பு திருப்பீட அவையின் செயலராகப் பணியாற்றிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.