2016-08-18 15:26:00

டில்லியில் இல்லப்பணியாளர்களின் ஒரு நாள் வேலை நிறுத்தம்


ஆக.18,2016. இல்லங்களில் பணியாற்றுவோருக்கு நீதியான ஊதியமும், பாதுகாப்பும் இந்திய அரசு வழங்கவேண்டும் என்று போராடி, 4000த்திற்கும் அதிகமான பணியாளர்கள், ஆகஸ்ட் 16, இச்செவ்வாயன்று, ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

டில்லி உயர் மறைமாவட்டத்தின் சமுதாயப் பணியின் மேற்பார்வையில் இயங்கி வரும் Chetnalaya என்ற அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஒருநாள் வேலை நிறுத்தத்தில் கலந்துகொள்ள, இவ்வமைப்பில் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ள அனைவரும் இணைந்து வந்தனர்.

மிகவும் பிற்படுத்தப்பட்ட கிராமங்களிலிருந்து நகரங்களுக்குக் கொணரப்படும் பெண்கள், இல்லத்தலைவர்கள், தலைவிகளால் பல வழிகளிலும் அநீதிகளை சந்திக்கின்றனர் என்று Chetnalaya அமைப்பின் இயக்குனர் அருள்பணி சவரிராஜ் அவர்கள், UCAN செய்திக்கு அளித்த பேட்டியொன்றில் கூறினார்.

பல்வேறு வகையிலும் ஏமாற்றப்படும் இந்த ஊழியர்கள், சட்டப்படி எவ்வித பாதுகாப்பும் இன்றி பணியாற்றிவருகின்றனர் என்று, இவ்வமைப்பின் செயலர், நீலிமா திர்க்கி அவர்கள், UCAN செய்தியிடம் கூறினார்.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.