2016-08-17 16:14:00

சமுதாய வன்முறைகளுக்கு அடிப்படையாக இருப்பது, அறியாமையே


ஆக.17,2016. நம் சமுதாயத்தைத் துன்புறுத்தும் வெறுப்புக்கும், வன்முறைகளுக்கும் அடிப்படையாக இருப்பது, நம் அறியாமையே; இந்த அறியாமை உருவாக்கும் அச்சமே வெறுப்பாகவும், வன்முறையாகவும் வெளிப்படுகின்றது என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

பலசமய உரையாடல் திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் ஷான் லூயி துரான் (Jean-Louis Tauran) அவர்கள், வத்திக்கான் நாளிதழ், L’Osservatore Romanoவில் வெளியிட்டுள்ள ஒரு கட்டுரையில், முஸ்லீம் கிறிஸ்தவ உரையடாலின் அவசியம் பற்றி கூறியுள்ளார்.

அருள் பணியாளர் Jacques Hamel அவர்கள் திருப்பலி நிகழ்த்திக்கொண்டிருந்த வேளையில் கொல்லப்பட்ட, ஆகஸ்ட் 26ம் தேதி, தானும் பிரான்ஸ் நாட்டில் இருந்ததாகவும், அன்று, கிறிஸ்தவர் மற்றும் இஸ்லாமியர் அனைவரும் அடைந்த அதிர்ச்சியை தான் கண்டதாகவும், இக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

மதங்களுக்கிடையே உரையாடல் வலுப்பெற வேண்டும் என்று திருத்தந்தையர் பலர் அழுத்தம் திருத்தமாகக் கூறிவந்துள்ளனர் என்பதை தன் கட்டுரையில் சுட்டிக்காட்டும் கர்தினால் துரான் அவர்கள், 'இவ்வுலகப் பயணத்தில் நாம் தனித்து பயணம் செய்வதில்லை' என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புனித பூமியில் சொன்ன வார்த்தைகளை நினைவுகூர்ந்துள்ளார்.

பலசமய உரையாடல், அனைத்து மதங்களும் ஒன்றே என்ற எண்ணத்தை விதைக்கும் என்ற அச்சத்தைத் தவிர்த்து, உரையாடல் வழியே, அனைத்து மதத்தினரும் தங்கள் வேற்றுமைகள் நடுவே, மற்ற சமயத்தினரை மதிக்க முடியும் என்பதை உணர்த்தும் ஒரு முயற்சியாக உரையாடலை மேற்கொள்ளவேண்டும் என்று, கர்தினால் துரான் அவர்கள் கூறினார்.

ஆதாரம் : ZENIT / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.