2016-08-17 16:26:00

ஈராக்கில் 100க்கும் அதிகமான சிறுவர் சிறுமியருக்கு புதுநன்மை


ஆக.17,2016. ஈராக் நாட்டில், ISIS தீவிரவாத அமைப்பின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிவரும் ஆல்கோஷ் (Alqosh) நகரில், ஆகஸ்ட் 15, மரியன்னையின் விண்ணேற்பு விழாவன்று 100க்கும் அதிகமான சிறுவர் சிறுமியருக்கு, கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை, லூயிஸ் ரஃபேல் சாக்கோ அவர்கள் புதுநன்மை வழங்கினார்.

ஆல்கோஷ் நகரின் அனைத்து அருள் பணியாளர்கள், துறவியர் மற்றும் விசுவாசிகள் என 700க்கும் அதிகமானோர் பங்கேற்ற இந்த வழிபாடு, அந்நகரில் ஒரு விழாவென நடைபெற்ற முதல் வழிபாடு என்று ஆசிய செய்தி கூறுகிறது.

சிறுவர் சிறுமியருக்கு புதுநன்மை வழங்கிய முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள், ஆல்கோஷ் நகர், கிறிஸ்தவ பாரம்பரியத்தின் கருவூலமான நகரம் என்பதால், இளையோர் அந்நகரை விட்டு ஓடிவிடாமல், அங்கேயே தங்கி, அந்நகரை மீண்டும் கட்டியெழுப்புவதில் அக்கறை காட்டுமாறு விண்ணப்பித்தார்.

ISIS தீவிரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ள மோசூல் நகருக்கு 50 கி.மீ. தூரத்தில் உள்ள ஆல்கோஷ் நகரம், அசீரிய, கல்தேய, கிறிஸ்தவ பாரம்பரியத்தின் ஒரு முக்கிய நகரமாகவும், 1551ம் ஆண்டு முதல் 1804ம் ஆண்டு முடிய, முதுபெரும் தந்தையர் தங்கியிருந்த இடமாகவும் இருந்ததென ஆசிய செய்தி மேலும் கூறுகிறது.       

ஆல்கோஷ் நகரில் திருப்பலியை நிறைவேற்றிய முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள், தான் பத்து ஆண்டுகளாக பேராயராகப் பணியாற்றிவந்த கிர்குக் நகரில், கிறிஸ்துவின் திரு இருதய பேராலயத்தில் கூடியிருந்த 1000த்திற்கும் அதிகமான விசுவாசிகளுக்கு விண்ணேற்பு விழா திருப்பலியை நிகழ்த்தினார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.