2016-08-17 14:42:00

இது இரக்கத்தின் காலம் : குற்றத்தை உணரவைத்த பெருந்தன்மை


பத்து வயது சிறுமி பரிமளம், வீட்டுக்குச் செல்லப் பிள்ளை. பிறருக்கு உதவும் நற்பண்புடையவர். இதனால், பரிமளம் என்ன கேட்டாலும் வாங்கிக் கொடுத்து விடுவார் அவரின் தந்தை. பரிமளத்தின் இந்த உதவும் பண்பை, தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள நினைத்தாள் ஜோதி என்ற பள்ளித்தோழி. கஷ்டப்படுபவர்க்கு உதவி தேவை என்று சொல்லி, அடிக்கடி பணமாகவும், பொருளாகவும் உதவி பெற்று, தனது பணப்பையை நிரப்பினார் ஜோதி. அரையாண்டுத் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அன்று தேர்வு எழுத ஜோதி பள்ளிக்கு வரவில்லை. காரணம் கேட்டபோது, அவள் தந்தைமீது திருட்டுக் குற்றம் சுமத்தி, காவலர் பிடித்துச் சென்றதாகக் கூறினார்கள். அவர் ஒரு கடையில் கணக்கெழுதும் வேலையில் இருந்தார். அங்குப் பணம் களவுபோய் விட்டதாகவும், ஜோதியின் வீட்டில் அந்தப் பணம் கண்டெடுக்கப்பட்டதாகவும் கூறினார்கள். அது என் பணம் என்று ஜோதி எவ்வளவோ சொல்லியும், காவல்துறை அதிகாரி அதை நம்பவில்லை. இந்தச் செய்தி காதில் விழுந்தவுடன், பரிமளம் தன் தந்தையையும், இரண்டு தோழிகளையும் அழைத்துக் கொண்டு காவல்நிலையம் சென்றாள். காவல் அதிகாரியிடம், "ஐயா, நாங்கள் ஜோதியுடன் படிக்கிறோம். அவர்கள் வீட்டில் நீங்கள் கண்டெடுத்த பணம் நாங்கள் சேர்த்த பணம். ஒரு விபத்தில் சிக்கிய பெண்ணுக்கு உதவ, சிறிது நாள்களுக்கு முன்னர், நான்தான் ஆயிரம் ரூபாய்வரை என் தந்தையிடம் கேட்டுக் கொடுத்தேன். அதனால் அது திருட்டுப் பணம் இல்லை. அத்துடன், ஜோதிதான் பலருக்கும் உதவி செய்கிறாள். அதனால் அவளிடமே இந்தப் பணத்தையும் கொடுத்து, ஏழைக்கு உதவுமாறு சொன்னேன். எங்கள் தந்தையையும் கேட்டுப் பாருங்கள்" என்றார். பரிமளத்தின் துணிவான பேச்சைக் கேட்டு காவலர் மனம் மாறி, ஜோதியின் தந்தையை விடுவித்து அனுப்பினார். மறுநாள் ஜோதி பள்ளிக்கு வந்ததும் நேரே பரிமளத்திடம் சென்று, அதுவரை அவளை ஏமாற்றிச் சேர்த்த பணத்தைக் கொடுத்து, "என் குற்றத்தையும் குறையையும் பாராமல், அதிலும் நிறைவைப் பார்த்த உன் நல்ல குணம் தெரியாமல் தவறு செய்துவிட்டேன். என்னை மன்னித்துவிடு. இனிமேல் நாம் இருவரும் சேர்ந்து மற்றவருக்கு உதவி செய்வோம் என்றார்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.