2016-08-16 14:25:00

விவிலியம் : காலமெலாம் வாழும் கருணைக் கருவூலம் - பகுதி – 35


நயீன் நகரக் கைம்பெண்ணின் மகனை உயிர்ப்பித்த புதுமையை, எவ்வித அழைப்போ, வேண்டுதலோ இன்றி, இயேசு, தானாகவே முன்வந்து செய்தார் என்பதைக் காணும்போது, நம் வாழ்வில் தானாகவே நிகழும் புதுமைகளை எண்ணிப்பார்க்க அழைக்கப்படுகிறோம். இந்த அழைப்பிற்குச் செவிமடுத்து, வாழ்வில் இறைவன் குறுக்கிடும்போது நிகழும் அற்புதங்களை அசைபோட, அடுத்தத் தேடலில் முயல்வோம் என்று, சென்ற தேடலை நிறைவு செய்தோம். ஆனால், நம் தேடல் பயணத்தில் இன்று ஒரு மாற்றம் இடம்பெறுகிறது. காரணம், ஆகஸ்ட் 10, கடந்த புதனன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய புதன் மறைக்கல்வி உரை, நம் தேடலை அவர் எண்ணங்களின் பக்கம் திருப்பியுள்ளது. கடந்த இரு வாரங்களாக, நயீன் நகரக் கைம்பெண்ணின் மகனை இயேசு உயிர்ப்பித்த புதுமையை நாம் சந்தித்துவரும் இவ்வேளையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதுமையை மையப்படுத்தி, தன் மறைக்கல்வி உரையை வழங்கியதை, நான் ஒரு வரமாகக் கருதுகிறேன். இப்புதுமையில் புதைந்துகிடக்கும் சில நுணுக்கமான விடயங்களை, தனக்கே உரிய பாணியில் திருத்தந்தை விளக்கிக் கூறினார்.

இறந்த ஒருவருக்கு மீண்டும் உயிர் தரும் புதுமை, நான்கு நற்செய்திகளில் மூன்று முறை மட்டுமே இடம்பெற்றுள்ளது. இது, மிக அரிதான, அற்புதமான புதுமை என்றாலும், அதைவிட, இப்புதுமையின் இதயத் துடிப்பாக விளங்குவது, அந்தக் கைம்பெண் மீது இயேசு காட்டிய பரிவு என்ற கருத்துடன், திருத்தந்தை தன் மறைக்கல்வி உரையைத் துவக்கினார். நற்செய்தியாளர் லூக்கா, இப்புதுமையில் பல நுணுக்கங்களைப் பதிவு செய்துள்ளார் என்று கூறியத் திருத்தந்தை, இப்புதுமை நிகழும் சூழலை, குறிப்பாக, அங்கு இருந்த இரு வேறுபட்ட கூட்டத்தினரைக் குறித்து அழகாக விவரித்தார்:

"நயீன் என்ற சிறு நகரத்தின் வாயிலில், இரு கூட்டத்தினர், எதிரெதிரே வந்தனர். இவ்விரு கூட்டத்தினருக்கும் இடையே, பொதுவான விடயங்கள் எதுவும் கிடையாது. சீடர்களும், மற்றவர்களும் இயேசுவைப் பின்தொடர்ந்து ஊருக்குள் செல்ல முற்பட்டனர்; ஊருக்குள்ளிருந்து வந்தவர்கள், உயிரற்ற ஓர் இளைஞனையும், அவரது தாயையும் பின்தொடர்ந்து வந்தனர்" என்று திருத்தந்தை, இச்சூழலை விவரித்தார்.

இவ்விரு கூட்டத்தினரும் எதிரெதிர் திசைகளில் வந்தது மட்டுமல்ல, அவர்களின் மனநிலையும் எதிரெதிர் துருவங்களாய் இருந்தன. இதைப் புரிந்துகொள்ள, நம் எண்ணங்களைச் சிறிது பின்னோக்கி நகர்த்துவோம். லூக்கா நற்செய்தி, 7ம் பிரிவில், 11 முதல் 17 முடிய உள்ள இறைச் சொற்றொடர்களில், கைம்பெண்ணின் மகன் உயிர் பெறும் புதுமை சொல்லப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக, 7ம் பிரிவின் முதல் பத்து இறைச் சொற்றொடர்களில், நூற்றுவர் தலைவரின் பணியாளர் குணமடைந்த புதுமை சொல்லப்பட்டுள்ளது.

இப்புதுமை முடிந்த கையோடு, இயேசுவும், அவரைப் பின்தொடர்ந்தவர்களும், நயீன் நகருக்குச் சென்றனர் என்ற கோணத்தில் கற்பனை செய்து பார்த்தால், இக்கூட்டத்தில் இருந்தவர்கள், அப்புதுமையைப் பற்றி பெருமையாகப் பேசியவாறே, அந்நகரின் வாயிலை அடைந்திருக்க வேண்டும். உரோமையப் படைத் தளபதி ஒருவரே, தங்கள் தலைவரின் சக்தியை உணர்ந்துவிட்டார் என்று, தங்களுக்குள் பேசியபடி வந்த இக்கூட்டத்தினரின் உள்ளமெல்லாம் பெருமையால் நிறைந்திருக்கும்; எனவே, அவர்கள் தலை நிமிர்ந்து, ஊரை நோக்கி நடந்து சென்றிருக்கவேண்டும்.

இதற்கு முற்றிலும் மாறாக, ஊருக்குள்ளிருந்து வந்த கூட்டத்திலோ, வெறுமை நிறைந்திருந்தது. அவர்கள் மெளனமாக, துயரத்துடன், தலையைத் தாழ்த்தியபடி நடந்து வந்திருக்கவேண்டும். முன்பின் அறிமுகம் இல்லாத இவ்விரு கூட்டத்தினரும், மாறுபட்ட மனநிலைகளுடன் இருந்ததால், ஒருவரையொருவர் கடந்து சென்றிருக்க வேண்டும் என்று இச்சூழலை விவரித்த திருத்தந்தை, அத்தகையச்சூழலில் இயேசு ஒரு மாற்றத்தைக் கொணர்ந்தார் என்று சுட்டிக்காட்டினார். கைம்பெண்ணான தாயைக் கண்டு பரிவு கொண்டு, "அழாதீர்" என்று முதலில் அவரைத் தேற்றிய இயேசு, பின்னர், பாடையைத் தொட்டார்.

அடுத்தவரைப் பற்றிய அக்கறை ஏதுமில்லாமல், தங்கள் மகிழ்வில் அல்லது துயரத்தில் புதைந்து ஒருவரையொருவர் கடந்து செல்லக்கூடிய ஒரு சூழலில், மாற்றங்களைக் கொணர விழைந்த இயேசுவின் செயல்களைப் பற்றி திருத்தந்தை பேசியபோது, "இயேசு, மரணத்தை நேருக்கு நேர் சந்திக்கத் தீர்மானித்தார். அதேவண்ணம், சிலுவையில் மீண்டும் ஒருமுறை அவர், மரணத்தை முகமுகமாய்ச் சந்தித்தார்" என்று, தன் மறைக்கல்வி உரையில் விளக்கினார்.

இதைத் தொடர்ந்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'நயீன் நகர வாயில்' என்ற உருவகத்தை, 'புனிதக் கதவு'க்கு ஒப்புமைப்படுத்தி, மிக அழகான எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார். 'புனிதக் கதவை' 'இரக்கத்தின் கதவு' என்று, திருத்தந்தை, பலமுறை குறிப்பிட்டு பேசியிருப்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்:

"இந்த யூபிலியின்போது, திருப்பயணிகள், புனிதக் கதவை, இரக்கத்தின் கதவை கடந்து செல்லும்போது, நயீன் நகர வாயிலில் நிகழ்ந்ததை (லூக்கா 7:11-17) நினைவில் கொள்வது நல்லது. கண்ணீரோடு தன்னைக் கடந்து சென்ற தாயை இயேசு கண்டதும், அந்தத் தாய், அவரது உள்ளத்திற்குள் நுழைந்துவிட்டார்! ஒவ்வொருவரும் புனிதக் கதவருகே செல்லும்போது, அவரவர் வாழ்வைச் சுமந்து செல்கிறோம். அந்த வாழ்வின் மகிழ்வுகள், துயரங்கள், திட்டங்கள், தோல்விகள், ஐயங்கள், அச்சங்கள் அனைத்தையும் இறைவனின் கருணைக்குமுன் சமர்பிக்கச் செல்கிறோம். புனிதக் கதவருகே, ஆண்டவர் நம் ஒவ்வொருவரையும் சந்திக்க வருகிறார். 'அழாதீர்' (லூக்கா 7:13) என்ற ஆறுதல்தரும் சொல்லை நம் ஒவ்வொருவரிடமும் கூறுகிறார்.

மனித குலத்தின் வலியும், கடவுளின் கருணையும் சந்திக்கும் கதவு இது. இதை நாம் எப்போதும் நினைவில் கொள்வோம். இக்கதவை நாம் கடந்து, இறைவனிடம் செல்லும்போது, நயீன் நகர இளைஞனிடம் சொன்னதுபோல், 'நான் உனக்குச் சொல்கிறேன், எழுந்திடு' (லூக்கா 7:14) என்று நம் அனைவரிடமும் இறைவன் சொல்கிறார்.

எழுந்து நிற்பதெற்கென்று இறைவன் நம்மைப் படைத்தார். 'ஆனால், நான் அடிக்கடி வீழ்கிறேனே!' என்று நாம் நினைக்கலாம். இயேசு நம்மிடம் எப்போதும் சொல்வது இதுதான்: 'எழுந்திடு! முன்னே செல்!' நாம் புனிதக் கதவைக் கடந்து செல்லும்போது இயேசு கூறும் 'எழுந்திடு' என்ற கட்டளைக்குச் செவிமடுப்போம். அந்தச் சொல் நம்மை, சாவிலிருந்து வாழ்வுக்கு அழைத்துச் செல்லும்" என்று நயீன் நகர வாயிலையும், புனிதக் கதவையும் இணைத்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய எண்ணங்கள், கடந்த புதன் மறைக்கல்வி உரையின் சிகரமாக அமைந்தன.

யூபிலி ஆண்டுகளின் ஒரு முக்கிய அடையாளமாக விளங்குவது, புனிதக் கதவு. திருஅவை வரலாற்றில், இதுவரை நிகழ்ந்த அனைத்து யூபிலி ஆண்டுகளிலும், உரோமையிலுள்ள நான்கு பசிலிக்காப் பேராலயங்களில், குறிக்கப்பட்ட கதவுகள் மட்டுமே புனிதக் கதவுகளாகக் கருதப்பட்டன. இந்தக் கருத்தை மாற்றி, இரக்கத்தின் யூபிலி ஆண்டில், உலகெங்கும் உள்ள பல்லாயிரம் ஆலயங்களில், புனிதக் கதவுகளைத் திறக்கச்சொல்லி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு புதிய வழிமுறையை அறிவித்தார். பேராலயங்களிலும், புனிதத் தலங்களிலும் மட்டும் அல்லாமல், பிறரன்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களிலும் புனிதக் கதவுகள் திறக்கப்பட வேண்டும் என்று திருத்தந்தை விரும்பினார்.

கடவுளின் கருணை, என்றும், எப்போதும் நம்மைத் தேடி வருகிறது, அதை அணுகிச் செல்ல நாம்தான் தயங்குகிறோம் என்பது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தாரக மந்திரம் என்பதை அனைவரும் அறிவோம். இந்த தாரக மந்திரத்தின் உட்பொருளை, புனிதக் கதவு என்ற எண்ணத்திலும் வெளிப்படுத்த விரும்பினார், திருத்தந்தை. எனவே, புனிதக் கதவை நாடி வர இயலாதவர்களை, புனிதக் கதவு தேடிவரும் என்பதை, இந்த யூபிலி ஆண்டிற்கென வெளியிட்ட மடல்களில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார். உடல்நலமின்றி மருத்துவமனைகளில் இருப்போர், வயதில் முதிர்ந்தோர், சிறைகளில் அடைபட்டிருப்போர் ஆகியோர், வாழும் இடங்களில் புனிதக் கதவுகள் நிறுவப்பட வேண்டும் என்று திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.

நயீன் நகர கைம்பெண்ணைத் தேடிச்சென்று தன் இரக்கத்தை வெளிப்படுத்திய இயேசுவைப்போல், மக்கள் வாழும் இடங்களிலேயே புனிதக் கதவுகள் நிறுவப்பட்டு, திறந்திருக்கும் என்ற ஆறுதல் தரும் எண்ணத்தை, இந்த யூபிலி ஆண்டில் மக்கள் மனதில் ஆழப்பதித்துள்ளார், திருத்தந்தை.

ஜூலை மாத இறுதி வாரம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலக இளையோர் நாள் நிகழ்வுகளில் கலந்துகொள்ள போலந்து நாட்டிற்குச் சென்றபோது, அங்கு, 'புனிதக் கதவு' என்ற எண்ணத்திற்கு மற்றொரு புதிய கண்ணோட்டம் தரப்பட்டதை நாம் உணர்ந்தோம்.

போலந்து நாட்டின் கிரக்கோவ் நகருக்கருகே, பல இலட்சம் இளையோர் கலந்துகொள்ளும் வகையில், 'இரக்கத்தின் திறந்தவெளி அரங்கம்' ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது. இந்த அரங்கத்தில், ஜூலை 30ம் தேதி மாலை, திருவிழிப்பு வழிபாடும், அடுத்தநாள் காலை, உலக இளையோர் நாள் நிகழ்வுகளின் சிகரமாக அமைந்த இறுதித் திருப்பலியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இந்த திறந்த வெளி அரங்கத்திற்குள் நுழைபவர்கள், இறைவனின் இரக்கத்திற்குள் நுழையவேண்டும் என்ற கருத்துடன், இவ்வரங்கத்தில், புனிதக் கதவொன்று, தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்தது. ஜூலை 30, சனிக்கிழமை மாலை, திருவிழிப்பு வழிபாட்டில் கலந்துகொள்ள அங்கு சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து தெரிவு செய்யப்பட்டிருந்த இளையோர் சிலருடன், கரங்களைக் கோர்த்தபடி, அப்புனிதக் கதவைக் கடந்து சென்றார்.

ஆலயங்கள், பிறரன்பு இல்லங்கள், சிறைச்சாலைகள், மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள் ஆகியவற்றில் மட்டுமல்ல, நம்பிக்கையுடன் மக்கள் கூடிவரும் இடங்கள் அனைத்திலும் புனிதக் கதவுகள், இரக்கத்தின் கதவுகள் திறந்திருக்கும் என்பதை, உலக இளையோர் நாள் நிகழ்வுகள், உலகிற்குப் பறைசாற்றின.

நயீன் நகர வாயிலையும், புனிதக் கதவையும் இணைத்து, திருத்தந்தை வழங்கிய மறைக்கல்வி உரையின் கருத்துக்கள், நம்மை மீண்டும் இரக்கத்தின் கதவை நோக்கி அழைத்து வந்துள்ளன. இதைத் தொடர்ந்து, இப்புதுமையின் உச்சக் கட்டமாக, உயிர்பெற்ற இளைஞனை தாயிடம் இயேசு ஒப்படைத்த நிகழ்விலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆழமான கருத்துக்களை முன்வைத்துள்ளார்:

"இயேசுவின் உயிர்தரும் வார்த்தைகளைக் கேட்ட 'இறந்தவர் எழுந்து உட்கார்ந்து பேசத் தொடங்கினார். இயேசு அவரை அவர் தாயிடம் ஒப்படைத்தார்' (லூக்கா 7:15). இச்சொற்களில் இயேசுவின் பரிவு முழுமையாக வெளிப்படுகிறது. தாய் தன் மகனை மீண்டும் பெறுகிறார். இயேசுவின் கரங்களிலிருந்து தன் மகனைப் பெற்றதால், அந்தத் தாய் இரண்டாம் முறை தாயாகிறார். ஆனால், இம்முறை அந்த மகனின் உயிர், தாயிடமிருந்து வரவில்லை, இறைவனிடமிருந்து வந்தது!"

நயீன் நகரக் கைப்பெண்ணின் மகனுக்கு இயேசு உயிர் தந்த புதுமையை, பல்வேறு நுணுக்கங்களுடன் இவ்விதம் விவரித்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மறைக்கல்வி உரையின் இறுதியில் கூறிய வார்த்தைகள், ஒரு சவாலாக, ஓர் அழைப்பாக ஒலிக்கின்றன. இன்றையத் தேடலின் இறுதியில், இந்த அழைப்பு நம் உள்ளத்தில் எதிரொலிக்கட்டும்:

"இயேசுவிடமோ, நம்மிடமோ உருவாகும் இரக்கம், உள்ளத்தில் துவங்கி, கரங்கள் வழியே வெளிப்படும் ஒரு பாதை. இதன் பொருள் என்ன? இயேசு எனக்குள் உருவாக்கியுள்ள, அல்லது, குணமாக்கியுள்ள புதிய இதயத்தைக் கொண்டு, நான் என் கரங்கள் வழியே, இரக்கச் செயல்களில் ஈடுபடவேண்டும். இரக்கம், இதயத்தில் துவங்கி, கரங்களால் ஆற்றப்படும் இரக்கச் செயல்களில் நிறைவடையும்!"

இதயத்தில் துவங்கி, கரங்கள் வழியே வெளிப்படும் இரக்கச் செயல்களுக்காக இவ்வுலகம் வெகுவாக ஏங்கித் தவிக்கிறது. இவ்வுலகம் ஏங்கிக் காத்திருக்கும் இரக்கச் செயல்கள், எவ்வித அழைப்பும் இன்றி, எதிர்பார்ப்பும் இன்றி நிகழும்போது, அவை, இவ்வுலகை இன்னும் அதிகமாக உயிர் பெறச் செய்கின்றன.

நயீன் நகரப் புதுமையை எவ்வித அழைப்போ, வேண்டுதலோ இன்றி, இயேசு, தானாகவே முன்வந்து செய்தார் என்பதைக் காணும்போது, நம் வாழ்வில் தானாகவே நிகழும் புதுமைகளை எண்ணிப் பார்க்க அழைக்கப்படுகிறோம். இந்த அழைப்பிற்குச் செவிமடுத்து, வாழ்வில் இறைவன் குறுக்கிடும்போது நிகழும் அற்புதங்களை அசைபோட, அடுத்தத் தேடலில் முயல்வோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.