2016-08-16 15:42:00

திருஅவை எப்போதும் ஒப்புரவு, அமைதியின் தூதராகும்


ஆக.16,2016. இந்தியா, தனது எழுபதாவது சுதந்திர தின விழாவைச் சிறப்பித்துள்ள இவ்வேளையில், இந்திய கத்தோலிக்க சமூகத்திற்கு இறைவன் வழங்கியுள்ள கொடைகளுக்கு நன்றி செலுத்தினார், மும்பைப் பேராயர், கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ்.

இவ்வாண்டு இந்திய சுதந்திர தின விழா, இரக்கத்தின் யூபிலி ஆண்டிலும், அருளாளர் அன்னை தெரேசா அவர்கள் புனிதராக அறிவிக்கப்படும் தருணத்திலும் இடம்பெற்றுள்ளது என்றும், அன்னை தெரேசா அவர்களின் புனிதர்பட்ட நிகழ்வு, அகில உலகுக்கும் ஒரு சிறப்புக் கொடை என்றும் கூறினார், ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் தலைவர் கர்தினால் கிரேசியஸ்.

நாட்டின் வளர்ச்சிப் பாதையில் முன்னோக்கிப் பயணிப்பதில், இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவரும் அங்கம் வகிக்கின்றனர் என்றும், சுதந்திரம், தோழமை, சமத்துவம், நீதி ஆகியவற்றின் அடிப்படையில், மனித சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதில், இந்திய கத்தோலிக்கத் திருஅவை, தொடர்ந்து செயல்படும் என்றும் கூறினார், கர்தினால் கிரேசியஸ்.

இந்திய கத்தோலிக்கத் திருஅவை நடத்தும் நலவாழ்வு மையங்களில் 85 விழுக்காடு, கிராமப்புறங்களில் உள்ளன என்று புள்ளி விபரங்கள் கூறுகின்றன. மேலும், 1905ல் நடைபெற்ற சுதேசி இயக்கம்,1920ல் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கம், 1930ல் இடம்பெற்ற, அரசு அடக்குமுறைக்கு அடிபணியா இயக்கம், 1942ல் இடம்பெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கம் போன்றவற்றில், கிறிஸ்தவர்கள் பங்கேற்றுள்ளனர் என்றும் கூறினார், கர்தினால் கிரேசியஸ்.

இவ்வாண்டில், சென்னை லஸ் ஆலயமும், கோவாவிலுள்ள, மார்காவோ தூய ஆவியார் ஆலயமும் 500ம் ஆண்டு நிறைவையும், மும்பை பான்ட்ராவிலுள்ள புனித ஆன்ட்ரூ ஆலயம் 400ம் ஆண்டு நிறைவையும் சிறப்பிப்பது, கடவுளின் இரக்கத்தின் அடையாளங்களாகும் என்றும், கர்தினால் கிரேசியஸ் அவர்கள் கூறினார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.