2016-08-16 15:19:00

காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஒருமைப்பாடு


ஆக.16,2016. போர்த்துக்கல் நாட்டில் கடந்த ஒரு வாரமாகப் பற்றியெரியும் காட்டுத் தீயால் சொத்துக்களையும், உறவுகளையும் இழந்துள்ள மக்களுக்குத் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தையின் பெயரில், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், Funchal மறைமாவட்ட ஆயர் Antonio Carrilho அவர்களுக்கு அனுப்பியுள்ள செய்தியில், பாதிக்கப்பட்டவர்களுக்குத் திருத்தந்தையின் செபமும், ஒருமைப்பாட்டுணர்வும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

ஆயர் Carrilho அவர்கள், Funchal பாதுகாவலரான மலைமாதா திருவிழாத் திருப்பலியை, ஆகஸ்ட் 15, இத்திங்களன்று நிறைவேற்றியபோது, திருத்தந்தையின் இச்செய்தி வாசிக்கப்பட்டது.

மலைகள் நிறைந்த இபேரியன் தீபகற்பத்தில் பரவிவரும் கடும் காட்டுத்தீயால் காயமடைந்தவர்கள், விரைவில் குணமடையவும், கிறிஸ்தவ நம்பிக்கையில் ஆறுதலடையவும் வேண்மெனக் கேட்டுள்ள திருத்தந்தை, இந்தத் தீயை அணைப்பதற்கு,  முயற்சிகளை மேற்கொண்டுள்ள இரண்டாயிரத்துக்கும் அதிகமான தீயணைப்பு வீரர்களுக்குத் தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.

மேலும், ஆபத்துக்களின் மத்தியில் தோழமைச் செயல்களையும், துணிச்சலையும் வெளிப்படுத்திவரும் போர்த்துக்கல் மக்களுக்கு, இத்திருப்பலி மறையுரையில், தனது நன்றியைத் தெரிவித்தார் ஆயர் Carrilho.

போர்த்துக்கல் நாட்டில், முப்பது இடங்களுக்கு மேலாக, காட்டுத்தீ பரவியுள்ளது. காற்று மற்றும் கடும் வெப்பநிலையால், வேகமாகப் பரவி வரும் காட்டுத்தீயில் குறைந்தது நான்கு பேர் இறந்துள்ளனர், மற்றும் நூற்றுக்கணக்கானோர் வீடுகளைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மேலும், இஸ்பெயின் நாட்டின் கலிசியா வடமேற்கு மாநிலத்திலும் காட்டுத்தீ பரவியுள்ளது. இதில் 17,300 ஏக்கர் பகுதி இழப்புக்குள்ளாகியுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.