2016-08-16 15:50:00

கட்டக்-புவனேஸ்வர் முன்னாள் பேராயர் சென்னத் மறைவு


ஆக.16,2016. ஒடிசா மாநிலத்தின் கந்தமால் மாவட்டம், கிறிஸ்தவர்க்கெதிரான கடும் வன்முறையால் தாக்கப்பட்ட காலத்தில், தலத்திருஅவை மேய்ப்பராகப் பணியாற்றிய பேராயர் இரஃபேல் சென்னத் அவர்கள், ஆகஸ்ட் 14, கடந்த ஞாயிறு இரவு காலமானார்.

பெருங்குடல் புற்றுநோயால் துன்புற்ற, கட்டக்-புவனேஸ்வர் முன்னாள் பேராயர் சென்னத் அவர்கள், தனது 82வது வயதில், மும்பை தூய ஆவியார் மருத்துவமனையில் காலமானார்.

கட்டக்-புவனேஸ்வர் பேராயராக 26 ஆண்டுகள் மேய்ப்புப் பணியாற்றிய பேராயர் சென்னத் அவர்கள், இந்தியாவில், கத்தோலிக்கத் திருஅவை மிகவும் கடும் துன்பங்களை எதிர்கொண்ட காலத்தில் பணியாற்றியவர்.

கந்தமால் மாவட்டத்தில், இந்துத் தீவிரவாதிகளால் கடுமையாய்ப் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவர்க்கு, இழப்பீடு பெறுவதில் இடைவிடாமல் உழைத்த பேராயர் சென்னத் அவர்கள், இறுதியாக, இம்மாதம் 2ம் தேதி, இந்திய உச்ச நீதிமன்றத்திடமிருந்து, மிகவும் மாண்புடன்கூடிய இழப்பீட்டுத் தொகையை, பாதிக்கப்பட்டவர்களுக்குப் பெற்றுத்தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கேரளாவின் திருச்சூரில் 1934ம் ஆண்டு பிறந்த பேராயர் சென்னத் அவர்கள், 1974ம் ஆண்டில், சம்பல்பூர் மறைமாவட்ட ஆயராக நியமிக்கப்பட்டார். பின்னர், 1985ம் ஆண்டு ஆகஸ்ட் 11ம் தேதியன்று, கட்டக்-புவனேஸ்வர் பேராயராக நியமிக்கப்பட்டார். இவர் இறைவார்த்தை துறவு சபையைச் சேர்ந்தவர்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.