2016-08-16 14:10:00

இது இரக்கத்தின் காலம் : நயீன் நகர வாயிலும், புனிதக் கதவும்


ஆகஸ்ட் 10, கடந்த புதனன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய புதன் மறைக்கல்வி உரையில், 'நயீன் நகர வாயில்' என்ற உருவகத்தை, 'புனிதக் கதவு'க்கு ஒப்புமைப்படுத்தி, மிக அழகான எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார்:

"இந்த யூபிலியின்போது, திருப்பயணிகள், புனிதக் கதவை, இரக்கத்தின் கதவை கடந்து செல்லும்போது, நயீன் நகர வாயிலில் நிகழ்ந்ததை (லூக்கா 7:11-17) நினைவில் கொள்வது நல்லது. கண்ணீரோடு தன்னைக் கடந்து சென்ற தாயை இயேசு கண்டதும், அந்தத் தாய், அவரது உள்ளத்திற்குள் நுழைந்துவிட்டார்! ஒவ்வொருவரும் புனிதக் கதவருகே செல்லும்போது, அவரவர் வாழ்வைச் சுமந்து செல்கிறோம். அந்த வாழ்வின் மகிழ்வுகள், துயரங்கள், திட்டங்கள், தோல்விகள், ஐயங்கள், அச்சங்கள் அனைத்தையும் இறைவனின் கருணைக்குமுன் சமர்பிக்கச் செல்கிறோம். புனிதக் கதவருகே, ஆண்டவர் நம் ஒவ்வொருவரையும் சந்திக்க வருகிறார். 'அழாதீர்' (லூக்கா 7:13) என்ற ஆறுதல்தரும் சொல்லை நம் ஒவ்வொருவரிடமும் கூறுகிறார்.

மனித குலத்தின் வலியும், கடவுளின் கருணையும் சந்திக்கும் கதவு இது. இதை நாம் எப்போதும் நினைவில் கொள்வோம். இக்கதவை நாம் கடந்து, இறைவனிடம் செல்லும்போது, நயீன் நகர இளைஞனிடம் சொன்னதுபோல், 'நான் உனக்குச் சொல்கிறேன், எழுந்திடு' (லூக்கா 7:14) என்று நம் அனைவரிடமும் இறைவன் சொல்கிறார்.

எழுந்து நிற்பதெற்கென்று இறைவன் நம்மைப் படைத்தார். 'ஆனால், நான் அடிக்கடி வீழ்கிறேனே!' என்று நாம் நினைக்கலாம். இயேசு நம்மிடம் எப்போதும் சொல்வது இதுதான்: 'எழுந்திடு! முன்னே செல்!' நாம் புனிதக் கதவைக் கடந்து செல்லும்போது இயேசு கூறும் 'எழுந்திடு' என்ற கட்டளைக்குச் செவிமடுப்போம். அந்தச் சொல் நம்மை, சாவிலிருந்து வாழ்வுக்கு அழைத்துச் செல்லும்"

நயீன் நகர கைம்பெண்ணைத் தேடிச்சென்று தன் இரக்கத்தை வெளிப்படுத்திய இயேசுவைப்போல், மக்கள் வாழும் இடங்களிலேயே புனிதக் கதவுகள் நிறுவப்பட்டு, திறந்திருக்கும் என்ற ஆறுதல் தரும் எண்ணத்தை, இந்த யூபிலி ஆண்டில் மக்கள் மனதில் ஆழப்பதித்துள்ளார், திருத்தந்தை. நயீன் நகர வாயிலையும், புனிதக் கதவையும் இணைத்து, திருத்தந்தை வழங்கிய மறைக்கல்வி உரையின் கருத்துக்கள், நம்மை மீண்டும் இரக்கத்தின் கதவை நோக்கி அழைத்து வந்துள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.