2016-08-15 15:34:00

வாழ்வின் சுமையால் துன்புறும் பெண்களை நினைவுகூர்வோம்


ஆக.15,2016. மரியாவின் விண்ணேற்பு, நாம் அனைவரும் அக்கறை கொள்ளும் நம் வருங்காலம் பற்றிய ஒரு மாபெரும் பேருண்மையாகும், இது, புதிய விண்ணகத்தையும், புதிய பூமியையும் நமக்கு உறுதியளிக்கின்றது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அன்னை மரியாவின் விண்ணேற்பு விழாவாகிய இத்திங்களன்று, வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த விசுவாசிகளுக்கு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மரியாவின் புகழ் பாடல், மனித சமுதாயம் அனைத்தின் பாடலாக மாறியுள்ளது என்றும் கூறினார்.

இன்றைய விழாவின் நற்செய்தி, மரியாவுக்கும், அவரது உறவினரான எலிசபெத்திற்கும் இடையே நடந்த சந்திப்பு பற்றிச் சொல்கிறது என்றும், மரியா, இறைத்தந்தை மற்றும் தமது மகன் இயேசுவின் திருமுகங்களைச் சந்திக்கச் சென்ற விண்ணக எருசலேம் நோக்கிய பயணம் பற்றி, இன்று தியானிக்கிறோம் என்றும், அன்னை மரியா தமது வாழ்வில் பலமுறை மலைப்பகுதியில் பயணம் செய்துள்ளார், அப்பயணத்தின் இறுதியாக, அவர் கல்வாரியில் நின்றார் என்றும் கூறினார் திருத்தந்தை.

வாழ்வின் சுமையாலும், வன்முறையின் கொடுமையாலும் துன்புறும் பெண்களையும், வல்லமைமிக்கவரின் ஆணவத்திற்கு அடிமையான பெண்களையும், மனிதமற்ற வேலைக்குக் கட்டாயப்படுத்தப்பட்ட சிறுமிகளையும், ஆண்களின் பேராசைக்குத் தங்களின் உடலையும், உணர்வுகளையும் அர்ப்பணிக்கக் கட்டாயப்படுத்தப்பட்ட பெண்களையும் இந்நாளில், சிறப்பாக நினைவுகூர்வோம், அவர்களுக்கு, அமைதி, நீதி, அன்பு ஆகிய வாழ்வின் தொடக்கம் விரைவில் கிடைக்கட்டும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அமைதியின் நாள்களை நமக்கு அளிக்கவும், நம் வாழ்வுப் பாதையைக் கண்காணிக்கவும், விண்ணக மகிமையின் முழுமையில், அவரது திருமகனை நாம் காணவும், விண்ணகத்தின் சுவையான அரசியிடம் நம்பிக்கையுடன் செபிப்போம் என்றும் கூறி, மூவேளை செப உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.