2016-08-15 14:22:00

இது இரக்கத்தின் காலம் : ஒரு பைசாவின் அருமை


அந்தச் செல்வந்தர் வீட்டுச் செல்ல மகன் கதிர்வேலு, அடிக்கடி தவறு செய்து விட்டு நீதிமன்றம் செல்வதும், செல்வ பலத்தால் தண்டனை பெறாமல் தப்புவதும் வழக்கமான ஒன்றாக இருந்து வந்தது. ஒரு முறை, அவ்வூரில் இருந்த விவசாயியின் நிலத்தை அபகரிக்கத் திட்டம் போட்டு, அவனுக்குக் கடன் கொடுத்ததாகப் பொய் வழக்குப் போட்டான் கதிர்வேலு. வழக்கு நீதிமன்றத்திற்குச் சென்றது. கதிர்வேலு அழைத்து வந்திருந்த பொய் சாட்சியை நீதிபதி விசாரணை செய்தார். அவனும், பொய்சாட்சி சொல்வதற்காக கதிர்வேலுவிடம் பணம் வாங்கிக்கொண்டு வந்திருந்தான். அப்போது கதிர்வேலுவின் பணியாள் கட்டுக் கட்டாகப் பணத்தைக் கதிர்வேலுவிடம் கொடுப்பதை நீதிபதி கவனித்தார். இம்முறை இவனைத் தப்பவிடக் கூடாது என முடிவு செய்தார் நீதிபதி. பொய்சாட்சி சொல்லவந்த அவனும், கதிர்வேலுக்குத் தண்டனை கிடைக்க வேண்டும் என்று, பல நாட்களாக மனதுக்குள் எண்ணியிருந்தான். அதனால் நீதிபதியிடம் உண்மையைக் கூறியதோடு, தனக்கு அவன் இலஞ்சம் கொடுத்துக் கூட்டி வந்ததையும் கூறினான். நீதிபதி கதிர்வேலுவிடம், "இப்போதாவது உன் குற்றத்தை ஒப்புக் கொள்கிறாயா?" என்று கேட்க, கையும் களவுமாகப் பிடிபட்டதால், கதிர்வேலு அமைதியாக நின்றான். பின்னர், "ஐயா, இந்தக் குற்றத்துக்கு நீங்க எவ்வளவு வேணும்னாலும் அபராதம் விதிங்க. நான் இப்பவே கட்டிடறேன்" என்றான் கர்வமாக. நீதிபதி புன்னகையுடன், "நீ யாரிடமும் கேட்கக் கூடாது. உன் கையிலிருந்து பணத்தைக் கட்டவேண்டும், பிறகு பின்வாங்கக் கூடாது" என்றார். சரியென்று தலையை அசைத்தான் கதிர்வேலு. "அப்படியானால் ஒரே ஒரு பைசாவை அபராதமாகக் கட்டிவிட்டுப்போ, இல்லையென்றால் ஒரு வருடம் சிறைத் தண்டனை அனுபவிக்கவேண்டும்" என்றார் நீதிபதி. திடுக்கிட்ட கதிர்வேலு தன் பையைத் துழாவினான். சட்டை, மடியென எங்குத் தேடியும் அவனுக்கு ஒரு பைசா கிடைக்கவில்லை. பணம், நோட்டுக் கட்டுக்களாக இருந்தனவே தவிர, ஒரு பைசா காசு அவனுக்குக் கிடைக்கவே இல்லை. புன்னகை புரிந்த நீதிபதி, "இப்போது ஒரு பைசா உனக்கு எவ்வளவு முக்கியமானதாக இருக்கிறது, பார்த்தாயா?. அதுபோலத்தான் மனிதர்களுக்குள் ஏழை, எளியவரைத் துச்சமாக எண்ணி, அவர்களைத் துன்புறுத்தக் கூடாது. இந்த உண்மையை சிறைத் தண்டனைக்குப் பிறகாவது புரிந்து நடந்துகொள். உன்னைத் திருத்தத்தான் இந்த சிறைத் தண்டனை" என்றார். அதுநாள்வரை தான் தவறாக நடந்து வந்ததற்காக வருந்தியபடியே சிறைச்சாலைக்குச் சென்றான் கதிர்வேலு.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.