2016-08-13 15:58:00

முன்னாள் பாலியல் தொழிலாளர்களைச் சந்தித்தார் திருத்தந்தை


ஆக.13,2016. பாலியல் வர்த்தகத்திலிருந்து விடுவிக்கப்பட்ட பெண்கள் பராமரிக்கப்படுகின்ற இல்லம் ஒன்றிற்கு, முன்னறிவிப்பு ஏதுமின்றி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளியன்று சென்று, அனைவரையும் வியப்பு கலந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

உரோம் நகரில், "புனித திருத்தந்தை 23ம் ஜான்" என்ற பெயரில் இயங்கும் இல்லத்தில், உடலளவில் கடுமையாய்ப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான இருபது பெண்கள் பராமரிக்கப்படுகின்றனர். இப்பெண்களில், சிலர், ஆப்ரிக்கா மற்றும் ஐரோப்பாவிலிருந்து மனித வர்த்தகம் செய்யப்பட்டவர்கள்.

இப்பெண்களில் ஏழு பேர் நைஜீரியாவையும், ஆறு பேர் ருமேனியாவையும், நான்கு பேர் அல்பேனியாவையும், மற்றவர்கள் இத்தாலி, டுனிசியா, உக்ரைன் ஆகிய நாடுகளையும் சேர்ந்தவர்கள். ஏறத்தாழ முப்பது வயதுடைய இப்பெண்களுடன், ஒரு மணி நேரத்திற்கு மேல் கலந்துரையாடினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மனித வர்த்தகர்களால், வேலைவாங்கித் தருவதாக ஏமாற்றப்பட்டு இவர்கள் இத்தாலிக்கும், மற்ற மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் அழைத்துவரப்பட்டு, பாலியல் தொழிலில் ஈடுபட கட்டாயப்படுத்தப்பட்டவர்கள். இந்த முன்னாள் பாலியல் தொழிலாளர்கள், தாங்கள் மேற்கொண்டுள்ள இப்புதிய வாழ்வில் உறுதியாய் இருக்குமாறு கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த இரக்கத்தின் யூபிலி ஆண்டில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆற்றிவரும், வெள்ளிக்கிழமை இரக்கச் செயல்களின் ஒரு நிகழ்வாக, இவ்வில்லச் சந்திப்பு இடம்பெற்றது.

மனித வர்த்தகம், "மனித சமுதாயத்திற்கு எதிரான குற்றம்" என்று  திருத்தந்தை அடிக்கடி கூறிவருவது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.