2016-08-13 16:07:00

எரிச்சலூட்டும் சொற்களால் மாணவர்கள் பாதிப்பு


ஆக.13,2016. எரிச்சலூட்டும் சொற்களாலும், செயல்களாலும் தொடர்ந்து நச்சரித்துவரும் போக்குகள், பள்ளி மாணவர்கள் மத்தியில், வேகமாகப் பரவி வருவதாக, யூனிசெப் என்ற, ஐ.நா.வின் குழந்தை நல அமைப்பு நடத்திய புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளில், 13 வயது முதல் 30 வயது வரையுள்ள இளையோரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், ஏறத்தாழ 97 விழுக்காட்டு இளையோர், தாங்கள் வாழ்கின்ற சமூகங்களில், இப்பிரச்சனை பரவலாக இடம்பெறுவதாகக் கூறியுள்ளனர்.

பாகிஸ்தான், மலேசியா, மாலி, கினி, இந்தோனேசியா, சாம்பியா, செனகல், மெக்சிகோ, உகாண்டா, லைபீரியா, சியெரா லியோன், அயர்லாந்து, உக்ரைன், சிலே, மொசாம்பிக், சுவாசிலாந்து, புர்க்கினா ஃபாசோ உட்பட பல நாடுகளின் இளையோரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. கடும் சொற்களாலும், செயல்களாலும் நச்சரிக்கும் இந்நடவடிக்கை, சிறார் மற்றும் இளையோரின் நலவாழ்வைப் பெரிதும் பாதிப்பதாக, சிறார் பாதுகாப்பு குறித்த யூனிசெப் நிறுவன ஆலோசகர் தெரேசா கில்பேன் அவர்கள் தெரிவித்தார். நவீன சமூக வலைத்தளங்கள் வழியாகவும், இந்நடவடிக்கை இடம்பெறுவதாக யூனிசெப் கூறியது. 

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.