2016-08-13 15:50:00

எம்.எஸ்.சுப்புலட்சுமி நினைவு தபால்தலை


ஆக.13,2016. மறைந்த கர்நாடக இசை மேதை எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள் பிறந்ததன் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, அவரைக் கவுரவிக்கும் வகையில், அடுத்த வாரத்தில் ஐக்கிய நாடுகள் நிறுவனம், சிறப்பு தபால் தலை ஒன்றை வெளியிடவுள்ளது.

ஐ.நா.வின் தபால்துறை, இதனை வெளியிடும் என்று, ஐ.நா.வுக்கான இந்திய நிரந்தரப் பணி அலுவலகம் அறிவித்துள்ளது. 

உலகெங்கும் உள்ள மக்களை, தன் இசையால் கட்டிப்போட்ட எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களைக் கவுரவிக்க, இந்தியாவின் 70வது சுதந்திர தினமான ஆகஸ்ட் 15, வருகிற திங்களன்று ஐ.நா.,வில் சிறப்பு நிகழ்ச்சி ஒன்று நடைபெறவுள்ளது. அதில், பிரபல இசையமைப்பாளர், ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள், சுப்புலட்சுமி அவர்களுக்கு இசை அஞ்சலி செலுத்துகிறார். இதன் வழியாக, ஐ.நா.வில் இசை நிகழ்ச்சி நடத்தும் இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை ரஹ்மான் பெறவுள்ளார். உலகெங்கும் பல நாடுகளில், இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ள சுப்புலட்சுமி அவர்கள், 1966ம் ஆண்டில் ஐ.நா. சபையில் இசைக் கச்சேரியை அரங்கேற்றி, ஐ.நா.,வில் இசை நிகழ்ச்சி நடத்திய முதல் இந்திய இசைக் கலைஞர் என்ற பெருமையையும் பெற்றார். சுப்புலட்சுமி அவர்களின் பல்வேறு சாதனைகளை விளக்கும் வகையிலான புகைப்பட கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தை சேர்ந்த பிரபல கர்நாடக இசைப் பாடகி, எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள், 1916ம் ஆண்டு, செப்டம்பர், 16ல் பிறந்தார். 2004ம் ஆண்டில் இவர் மறைந்தார். இசைத்துறையில், பல்வேறு சாதனைகள் படைத்த இவருக்கு, நாட்டின் மிக உயரிய பாரத ரத்னா விருது வழங்கி, மத்திய அரசு கவுரவித்தது. அவரின் நுாற்றாண்டு பிறந்தநாள் விழாவைக் கோலாகலமாக கொண்டாடவும்  இந்திய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

ஆதாரம் : Agencies/ வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.