2016-08-13 14:25:00

இது இரக்கத்தின் காலம் – மண்ணுலகில் தீ மூட்டி, தகனமானவர்


1970களில், அமெரிக்க ஐக்கிய நாட்டின் நிதி உதவியுடன், எல் சால்வதோர் அரசு, ஏழைகளை, வதைத்துவந்தது. கருணை ஏதுமின்றி வறியோரைக் கொன்று குவித்த இராணுவத்திற்கு, அமெரிக்க அரசு அளித்துவந்த நிதி உதவியை உடனே நிறுத்தவேண்டும் என சான் சால்வதோர் பேராயர், ஆஸ்கர் ரொமேரோ அவர்கள், அமெரிக்க அரசுத் தலைவர், ஜிம்மி கார்ட்டர் அவர்களுக்கு, மடல் ஒன்றை அனுப்பினார். இந்த மடல் அனுப்பப்பட்டு இரு மாதங்களுக்குப் பின், 1980ம் ஆண்டு, மார்ச், 24ம் தேதி, பேராயர் ரொமேரோ அவர்கள், திருப்பலி நிகழ்த்திக் கொண்டிருந்த வேளையில், இராணுவ வீரர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

தான் எடுத்துரைத்த உண்மைகள், பலருக்கு, குறிப்பாக, சக்திமிகுந்த செல்வர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் சங்கடத்தை விளைவிக்கின்றன என்பதை நன்கு உணர்ந்திருந்த பேராயர் ரொமேரோ அவர்கள், தனது மரணத்தைப் பற்றியும் பேசத் தயங்கவில்லை. ஒருமுறை அவர் ஏழை விவசாயிகளுக்கு உரை வழங்கியபோது, "உங்கள் குருக்களையும், ஆயரையும் அவர்கள் கொன்றுவிட்டால், நீங்கள் ஒவ்வொருவரும் இறைவனின் குரலை ஓங்கி, ஒலிக்கச் செய்யும் ஒலி பெருக்கிகளாகச் செயல்படுங்கள். நீங்கள் ஒவ்வொருவரும் இறைவாக்கினார்களாக மாறவேண்டும்... உயிர்ப்பு இல்லாத மரணத்தை நான் நம்பவில்லை. அவர்கள் என்னைக் கொன்றால், சால்வதோர் மக்களில் நான் மீண்டும் உயிர்ப்பேன்" என்று கூறினார்.

மண்ணில் தீ மூட்ட வந்த இயேசு, அந்த தீயில் தானே தகனப் பலியாகவும் மாறினார். அவரைப்போலவே, தனது உண்மைச் சொற்களால், எல் சால்வதோர் நாட்டில் தீ மூட்டி, அத்தீயில் தகனப்பலியாக உயிர் நீத்தவர், அருளாளரான, பேராயர் ஆஸ்கர் ரொமேரோ.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.