2016-08-12 15:51:00

பாகிஸ்தானில் சிறுபான்மையினர் உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும்


ஆக.12,2016. பாகிஸ்தானில், முஸ்லிம்கள் அல்லாத சிறுபான்மை சமூகங்களின் உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டு, அவர்கள் தேசிய வாழ்வில் ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்று, அந்நாட்டு ஆயர் ஒருவர் விண்ணப்பித்துள்ளார்.

பாகிஸ்தானில் இவ்வியாழனன்று கடைப்பிடிக்கப்பட்ட தேசிய சிறுபான்மையினர் நாள் நிகழ்வில் உரையாற்றிய, ஃபாய்சலாபாத் ஆயரும், நீதி மற்றும் அமைதி அவைத் தலைவருமான ஆயர் ஜோசப் அர்ஷத் அவர்கள் இவ்வாறு விண்ணப்பித்தார்.

பாகிஸ்தான் நாடு உருவானதில், முஸ்லிம்கள் அல்லாத குடிமக்களுக்கும் முக்கிய பங்கு உள்ளது என்றும், அம்மக்கள் பாகிஸ்தானின் சுதந்திரத்திற்காக, தங்கள் வாழ்வைத் தியாகம் செய்தது மட்டுமல்ல, நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு தொடர்ந்து அவர்கள் உழைத்து வருகின்றனர் என்றும் ஆயர் அர்ஷத் அவர்கள் கூறினார்.

பாகிஸ்தானில், இந்து, கிறிஸ்தவ மற்றும் சீக்கிய மதத்தினர் ஆற்றிய சேவைகளை மதிக்கும் விதமாக, அந்நாட்டு அரசு, சிறுபான்மையினர் தேசிய நாளை உருவாக்கியுள்ளது.

மேலும், ஆகஸ்ட் 14ம் தேதி சிறப்பிக்கப்படும் பாகிஸ்தானின் சுதந்திர தினத்திற்கென, செய்தி வெளியிட்டுள்ள லாகூர் பேராயர் செபாஸ்டியான் ஷா அவர்கள், அந்நாட்டில் மதங்களுக்கு எவ்விதப் பிரச்சனையும் இருக்காது என்றும், நாட்டில் ஒவ்வொரு குடிமகனுக்கும் தனது மதத்தின் அடிப்படையில் சுதந்திர வாழ்வு வழங்கப்படும் என்றும், நவீன பாகிஸ்தானை நிறுவிய முகமது அலி ஜின்னா அவர்கள் உறுதியளித்ததைச் சுட்டிக் காட்டியுள்ளார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.