2016-08-12 15:14:00

சிரியா நாட்டு புலம்பெயர்ந்தவர்களுடன் திருத்தந்தை மதிய உணவு


ஆக.12,2016. “ஒப்புரவு அருளடையாளத்தில் இறைத்தந்தையின் இரக்கம்நிறைந்த அரவணைப்பை சந்திக்கிறோம்; இறைத்தந்தையின் அன்பு, எப்போதும் மன்னிக்கின்றது”  என்ற சொற்களை, தன் டுவிட்டர் செய்தியாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளியன்று வெளியிட்டார்.

மேலும், இவ்வியாழனன்று, வத்திக்கானின் சாந்தா மார்த்தா இல்லத்தில், சிரியா நாட்டு 21 புலம்பெயர்ந்த மக்களுடன் மதிய உணவருந்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஒவ்வொருவரையும் கைகுலுக்கி வரவேற்ற திருத்தந்தை, சிறாரின் தலைகளில் முத்தமிட்டு, செபத்தோடு மதிய உணவை ஆரம்பித்து வைத்து, அவர்களோடு அமர்ந்து உணவருந்தினார்.

உங்களையும், உங்கள் குடும்பத்தையும், இந்த உணவையும் ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக; நாம் முன்னோக்கிச் செல்வோம்; இப்பூமியில் அமைதி நிலவுவதாக என்று செபித்த திருத்தந்தை, உணவு நேரத்தில் இம்மக்களின் வாழ்வு பற்றியும் கேட்டறிந்தார். 

இச்சிறார் வரைந்த ஓவியங்களையும், அவர்களோடு சேர்ந்து பார்த்து இரசித்து, அவர்களுக்குப் பொம்மைகளையும், பிற பரிசுப்பொருள்களையும் வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த 21 பேரில், மூன்று திருமணமான தம்பதியர் மற்றும் ஆறு சிறாரும் உள்ளடங்குவர். மேலும், இவர்களுக்கு உரோமையில் ஆதரவளித்துவரும் சான் எஜிதியோ பிறரன்பு அமைப்பின் தலைவர் அந்த்ரேயா ரிக்கார்தி மற்றும் சில வத்திக்கான் அதிகாரிகளும், இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

கடந்த ஏப்ரல் 16ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிரேக்க நாட்டின் லெஸ்போஸ் தீவைப் பார்வையிட்டபோது, முதல் கட்டமாக, சிரியா நாட்டுப் புலம்பெயர்ந்த மூன்று குடும்பங்களைத் தன்னுடன் உரோமைக்கு அழைத்து வந்தார். மறுகட்டமாக, மேலும் சிலர் அழைத்து வரப்பட்டனர். இந்த 21 பேரில் திருமணமான ஒரு தம்பதியர் மட்டுமே கிறிஸ்தவர்கள். ஏனையோர் முஸ்லிம்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.