2016-08-12 15:42:00

இரக்கத்தைத் துணிச்சலோடு செயல்படுத்த இளையோருக்குப் பயிற்சி


ஆக.12,2016. தனி செபம் மற்றும் குழு செபத்தின் வழியாக, கடவுளோடு உள்ள உறவை ஆழப்படுத்தவும், வாழ்வின் பொருளை கண்டுணரவும் உதவுவதற்கென, Taizé துறவு குழு, ஆசிய இளையோர்க்கு ஒரு வாரப் பயிற்சிப் பாசறையை நடத்தி வருகிறது.

ஹாங்காங்கில் இப்புதனன்று தொடங்கியுள்ள இப்பாசறையில், ஹாங்காங், மக்காவோ, சீனா, தாய்வான், தென் கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளிலிருந்து ஏறத்தாழ 300 இளையோர் கலந்துகொள்கின்றனர். இப்பாசறை, வருகிற ஞாயிறன்று நிறைவடையும்.

இரக்கத்தைத் துணிச்சலோடு செயல்படுத்த இளையோரைத் தூண்டும் விதமாக, ஐந்து பரிந்துரைகள் இக்கூட்டத்தில் முன்வைக்கப்படுகின்றன.

இரக்கமுள்ள இறைவனிடம் தன்னை அர்ப்பணித்தல், தொடர்ந்து மன்னித்தல், இன்னல் நிறைந்த சூழல்களை, தனியாக அல்லது குழுவாக எதிர்கொள்தல், சமூகச் சூழல்களிலும் இரக்கத்தைப் பரவச் செய்தல், எல்லாப் படைப்புகளிடமும் இரக்கமாக இருத்தல் ஆகிய ஐந்து இலக்குகள் இதில் வலியுறுத்தப்படுகின்றன.

அமைதியின் தூதர்களாகவும், தங்களின் அன்றாட வாழ்வில் நம்பிக்கை கொண்டவர்களாகவும் இளையோரை மாற்றுவதற்கு, இக்கூட்டத்தில் முயற்சிகள் எடுக்கப்படுகின்றன என்று, ஆசியச் செய்தி நிறுவனம் கூறுகின்றது. 

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.