2016-08-11 15:55:00

சாம்பியா நாட்டு தேர்தலுக்கு ஆயர்களின் வேண்டுகோள்


ஆக.11,2016. கத்தோலிக்கர்களுக்கும், நல்மனம் கொண்ட அனைவருக்கும், தங்கள் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் கடமை உள்ள அதேவேளையில், தேர்தல் காலத்தில் அமைதியைக் காப்பதும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடமை என்று சாம்பியா ஆயர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஆகஸ்ட் 11, இவ்வியாழனன்று சாம்பியாவின் அரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் சூழலில், ஆயர்கள் சார்பில், சாம்பியா ஆயர் பேரவையின் தலைவர், பேராயர் Telesphore Mpundu அவர்கள் இந்த விண்ணப்பத்தை விடுத்துள்ளார்.

அரசியல், பொருளாதார, சமுதாய திட்டங்களில் நல்ல அறிவுத் திறனும், உண்மையை எடுத்துரைக்கும் துணிவும், சமுதாய நீதியையும், பொதுநலனையும் முன்னிறுத்தும் கருத்தும் கொண்ட ஒருவரை தங்கள் தலைவராகத் தேர்ந்தெடுக்குமாறு பேராயர் Mpundu அவர்கள் இம்மடலில் கூறியுள்ளார்.

தேர்தலைக் கண்காணிக்கும் நிறுவனங்களும், ஊடகத் துறையினரும் பொறுப்புடன் செயல்பட்டு, தேர்தலை கண்ணியத்துடனும், அமைதியுடனும் நடத்த உதவ வேண்டும் என்று பேராயரின் மடல் வலியுறுத்துகிறது.

இலஞ்சம், ஏமாற்றுவேலை ஆகிய தவறான வழிகளில் செல்வதற்குப் பதில், மனசாட்சியைப் பின்பற்றி கத்தோலிக்கர்கள் வாக்களிக்கவேண்டும் என்று பேராயர் Mpundu அவர்கள் தன் மடலின் இறுதியில் விண்ணப்பித்துள்ளார்.

ஆதாரம் : ZCCB / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.