2016-08-11 15:47:00

கொலம்பியா நாட்டின் பொகோட்டாவில் இரக்கத்தின் மாநாடு


ஆக.11,2016. நடைபெறும் இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் ஒரு முக்கிய நிகழ்வாக, ஆகஸ்ட் 27ம் தேதி முதல், 30ம் தேதி முடிய, கொலம்பியா நாட்டின் பொகோட்டாவில் இரக்கத்தின் மாநாடு ஒன்று நடைபெறும் என்று, இலத்தீன் அமெரிக்க திருப்பீட அவை அறிவித்துள்ளது.

இலத்தீன் அமெரிக்க ஆயர் பேரவைகளின் உயர்மட்டக் குழுவும் (CELAM), இலத்தீன் அமெரிக்க திருப்பீட அவையும் இணைந்து நடத்தும் இந்த மாநாட்டில், வட, மத்திய, தென் அமெரிக்க நாடுகளிலிருந்தும், கரீபியன் தீவுகளிலிருந்தும் வருகைதரும் பிரதிநிதிகள் கலந்துகொள்வர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

15 கர்தினால்கள், மற்றும் 120 ஆயர்கள் தங்கள் பெயர்களை ஏற்கனவே பதிவு செய்துள்ளனர் என்றும், இவர்கள் அல்லாமல், இருபால் துறவு சபைகளின் தலைவர்கள், அருள்பணியாளர்களைப் பயிற்றுவிப்பவர்கள் என, 400க்கும் அதிகமானோர் இந்த மாநாட்டில் பங்கேற்பர் என்று இலத்தீன் அமெரிக்க திருப்பீட அவை அறிவித்துள்ளது.

பொகோட்டாவின் பேராயரும், CELAM குழுவின் தலைவருமான கர்தினால் Rubén Salazar மற்றும், இலத்தீன் அமெரிக்க திருப்பீட அவையின் தலைவர், Marc Ouellet ஆகியோரின் தலைமையில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அளிக்கும் காணொளிச் செய்தி, இரக்கத்தை மையப்படுத்தி நிகழும் இந்த மாநாட்டினைத் துவக்கி வைக்கும் என்றும், வழிபாட்டு நிகழ்வுகள் மட்டுமல்லாமல், இரக்கச் செயல்பாடுகளும் இந்த மாநாட்டு நாட்களில் இடம்பெறும் என்றும் இலத்தீன் அமெரிக்க திருப்பீட அவை அறிவித்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.