2016-08-11 14:59:00

இது இரக்கத்தின் காலம் : வாய்ப்புக் கிட்டும்போதெல்லாம்...


ஓர் எறும்பிற்கு தாங்க முடியாத தாகம். தண்ணீர் குடிக்க அது ஒரு நதிக்குச் சென்றது. அது தண்ணீர் குடிக்கும் சமயத்தில் வெள்ளம் வந்து அதை அடித்துக்கொண்டு போயிற்று. தண்ணீரில் மூழ்கும் தறுவாயில் இருந்த எறும்பை, அருகாமையில் மரத்தின் மேல் உட்கார்ந்திருந்த புறா ஒன்று பார்த்தது. உடனே அது மரத்திலிருந்த ஒரு இலையை பறித்து எறும்புக்கு அருகே தண்ணீரில் போட்டது. இலையின் மேல் எறும்பு மெதுவாக ஏறி கரையைச் சேர்ந்தது. சிறிது நேரத்திற்குப் பிறகு, வேடன் ஒருவர் வந்து மரத்தின் மேல் அமர்ந்திருந்த புறாவைப் பிடிக்க எண்ணி, அதை நோக்கி வில்லில் அம்பைப் பொருத்தி குறி பார்த்தார். அதை கவனித்துக் கொண்டிருந்த எறும்பு, வேடனின் காலில் கடித்தது. அதனால் ஏற்பட்ட வலியில் வேடனின் குறி தப்பியது. புறாவும் அங்கிருந்து “சட்”என பறந்தோடி தப்பியது. எனவே, ஒருவர் நமக்கு செய்த உதவிக்காக அவரிடம் நன்றியுள்ளவராக இருப்பதோடு, வாய்ப்பு ஏற்பட்டால் அவருக்கு உதவவும் வேண்டும். இதையே திருவள்ளுவர், நன்றி மறப்பது நன்றன்று, நன்றல்லது;  அன்றே மறப்பது நன்று என்றார். ஆம். ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறக்கக் கூடாது. அதேநேரம் யாரேனும் நமக்குத் தீமை செய்தால் அதை மறந்துவிடுவது நல்லது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.