2016-08-11 16:14:00

அமெரிக்க தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் நாகரீகம் அவசியம்


ஆக.11,2016. அமெரிக்க ஐக்கிய நாட்டில் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் அரசுத் தலைவர் தேர்தலுக்கு முன்னதாக அங்கு நடைபெறும் பிரச்சாரக் கூட்டங்கள், நாகரீகமான முறையில் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன், அந்நாட்டின் அருள் சகோதரிகள், அனைத்து கட்சி வேட்பாளர்களுக்கும், கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

குடியரசு, ஜனநாயகம், பசுமை, சுதந்திரம் ஆகிய கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும், ஒருவரை ஒருவர் தரக்குறைவாகப் பேசுவதை நிறுத்திவிட்டு, பொது மக்களின் நன்மைகளை முன்னிறுத்தி பேசுமாறு, அருள் சகோதரிகளின் மடல் விண்ணப்பித்துள்ளது.

அமெரிக்க ஐக்கிய நாட்டின் பெண் துறவியர் அவை என்ற அமைப்பைச் சேர்ந்தவர்களில் 5,600த்திற்கும் அதிகமான அருள் சகோதரிகள் கையெழுத்திட்டுள்ள இம்மடல், ஆகஸ்ட் 8ம் தேதி, இத்திங்களன்று அனைத்து கட்சி வேட்பாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது என்று CNS கத்தோலிக்கச் செய்தி கூறுகிறது.

அனைத்து குடிமக்களின் மாண்பைக் காப்பதும், பொதுநலனைப் பேணுவதும் அரசியலின் தலையாயக் கடமை என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அமெரிக்க ஐக்கிய நாட்டு பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் ஒரு பகுதியை, அருள் சகோதரிகள், தங்கள் மடலில் மேற்கோளாகக் கூறியுள்ளனர்.

தனிப்பட்ட முறையிலும், குடும்பத்திலும் பல்வேறு தியாகங்களைச் செய்து இப்போட்டியில் ஈடுபட்டுள்ள அனைத்து வேட்பாளர்களுக்கும் தங்கள் செபங்களை வாக்களிப்பதாக அருள் சகோதரிகளின் மடல் உறுதி கூறியுள்ளது என்று CNS கத்தோலிக்கச் செய்தி கூறுகிறது.

ஆதாரம் : CNS / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.